தாராபுரம், மே 10 -தாராபுரம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள அமராவதி ஆற்று மணல் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரிகளை துணை ஆட்சியர் பறிமுதல் செய்தார்.தாராபுரம் பகுதியில் குடிநீர் ஆதாரமாக விளங்குவது அமராவதி ஆறாகும். தாராபுரம் வட்டத்தில் 67 கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் புதிய அமராவதி மற்றும் பழைய அமராவதி ஆயக்கட்டு பாசன திட்டத்தின் மூலம் 40 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகிறது. இந்நிலையில் அமராவதி ஆற்றில் கடந்த சில மாதங்களாக இரவு நேரத்தில் மணல் கொள்ளை நடைபெற்றது. இதனால் மண் வளம் குறைவதால் தண்ணீர் நிற்காமல் ஓடி விடுகிறது. மேலும் கூட்டு குடிநீர் திட்ட கிணறுகளின் அருகில் மணல் கொள்ளை நடப்பதால் குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து தாராபுரம் துணை ஆட்சியருக்கு பல்வேறு தரப்பிடமிருந்து புகார்கள் வந்தன. இதையடுத்து துணை ஆட்சியர் பவன்குமார் கரையூர், மூலனூர் பகுதியில் மணல் கொள்ளை தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார். அப்போது தாராபுரம் கரூர் மெயின்ரோட்டில் உள்ள ஆலாம்பாளையத்தில் உள்ள விவசாயி தோட்டத்தில் திடீர் ஆய்வை மேற்கொண்டார். அங்கு சுமார் 342 யூனிட் அமராவதி ஆற்று மணல் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. இம்மணலை விற்பனைக்கு எடுத்து செல்ல பொக்லைன் மற்றும் 6 லாரிகள் மற்றும் ஒரு ஜீப்பும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த மணல் குவியல் இப்பகுதியில் இருந்து 4 கி.மீட்டர் தொலைவில் உள்ள கவுண்டையன்வலசு அமராவதி ஆற்றுப்படுகையில் இருந்து கடத்தி வரப்பட்டது என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பதுக்கி வைக்கப்பட்ட மணல் பறிமுதல் செய்யப்பட்டு பொதுப்பணித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மூலனூர் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மணல் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. தோட்டத்தின் உரிமையாளருக்கு இதில் தொடர்பு உள்ளதா எனவும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து துணை ஆட்சியர் பவன்குமார் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், மணல் கொள்ளையை தடுக்க வருவாய்த்துறை சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் மணல் கொள்ளை குறித்து தாராபுரம் துணை ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ரவிச்சந்திரன், வட்டாட்சியர் ரவிச்சந்திரன், வருவாய் ஆய்வாளர் சுந்தரமூர்த்தி உடனிருந்தனர்.