உதகை, ஏப். 25-மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு மூப்பு மற்றும் விற்பனை அடிப்படையில் பணியமர்த்த வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு நீலகிரி மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் சார்பில் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன் வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.டாஸ்மாக் நிர்வாகம் உயர்நீதிமன்ற உத்தரவின்படி இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு காலதாமதமின்றி நடத்த வேண்டும். சுழற்சி முறை பொது பணியிட மாறுதலை அமலாக்கிட வேண்டும். மூடப்பட்ட கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு மூப்பு அடிப்படையிலும், விற்பனை அடிப்படையிலும் பணியமர்த்த வேண்டும். வன விலங்குகளின் தாக்குதல் அதிகரித்துள்ளதால் நீலகிரி மாவட்டத்தில் இரவு பணி நேரத்தை குறைக்க வேண்டும் எனவலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணை தலைவர் ஜே.ஆல்தொரை தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் பி.மகேஷ், பொருளாளர் சிவகுமார், இரியன், பா.சுப்பிரமணியன், நவீன் சந்திரன், ஜெயம்ராஜ், நந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசுஅனைத்துத்துறை ஓய்வு பெற்றோர் சங்க தலைவர் ராமன்குட்டி, டாஸ்மாக் குடோன் சுமை தொழிலாளர் சங்கசெயலாளர் ரங்கசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாவட்ட உதவி மேலாளர் கண்ணனிடம் மனு அளிக்கப்பட்டது.