கோயம்புத்தூர், ஏப்.13– நாடாளுமன்ற தேர்தலில் இடதுசாரிகளை ஆதரிப்பது என முடிவெடுத்திருப்பதாகவும், களத்திலும், கலைத்தளத்திலும் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்ப தாகவும் திரைப்பட இயக்குநர் ராஜூமுருகன் சனிக்கிழமையன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் திரைப்பட இயக்குநர் ராஜூமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ‘காம்ரேட் டாக்கீஸ்’ என்ற யூ டியூப் சேனலில் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சார பாடல் மற்றும் குறும்படத்தை வெளியிட்டார். இந்தபாடல் மற்றும் குறும்படம் மத்திய, மாநில ஆட்சியாளர்களின் மக்கள் விரோத செயல் பாடுகளை விமர்சித்து எடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து இயக்குநர் ராஜூ முருகன் கூறுகையில், “என் எழுத்து, படைப்பு, நேசிப்பு அனைத்தும் அறம் சார்ந்த அரசியலை பேசி வருகிறது. அனைத்தையும் திரைப்படங்களில் சொல்லி விட முடியாது என்பதால், இந்தசேனலை துவங்கி செயல்படு கின்றோம். இசைக் கலைஞர்கள், நாடகக் கலைஞர்கள், நடிகர்களைஒன்றிணைத்து இதைத் துவங்கி இருக்கின்றோம். துணிந்துசொல் என்ற பெயரில் பிரச்சார பாடலையும், காவல்காரன் என்ற பெயரில் குறும்படமும் இப்போது வெளியிடுகின்றோம். மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவே இவற்றை வெளியிடு கின்றோம். இந்த பாடலை தங்கள் டிவிட்டர் பக்கத்தில் சீத்தாராம் யெச்சூரி, ஜிக்னேஷ் மேவானி ஆகிய தலைவர்கள் வெளியிட இருக்கின்றனர்” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “நாடாளுமன்ற தேர்தலில் சிபிஎம், சிபிஐ ஆகிய இடதுசாரி கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிடும் 4 தொகுதிகளிலும் நேரடியாக பிரச்சாரமும் மேற்கொள்கின்றேன். தமிழக சட்டமன்றத்தில் ஒரு இடதுசாரி உறுப்பினர்கள்கூட இல்லாதது மிகப்பெரிய இழப்பு. இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்கள் அறம்சார்ந்து செயல்படக் கூடி யவர்கள். ஒரு வேட்பாளர் 50 வேட்பாளர்களுக்கு சமம். ஆகவே இவர்கள் வெற்றிபெற வேண்டும். நாடாளுமன்றம் செல்ல வேண்டும். இதேபோல் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக 40 ஆண்டு காலமாக அண்ணன் திருமா வளவன் இயங்கி வருகிறார். அவருக்கு ஆதரவாகவும் சிதம்பரம் தொகுதியில் பிரச்சாரம் மேற் கொள்ள இருக்கின்றேன். இடதுசாரிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்வதால் எதிர்வினைகள் நடக்கும் எனத் தெரியும். அதைத் தாண்டி தங்களின்குரலை ஒலிப்பதுதான் கலைஞர் களின் வேலை. நான் எப்போதும் இடதுசாரி இயக்கத்தை முன் நிறுத்துபவன் என்பதாலும், இது என் கடமை என்பதாலும் களத்திலும், கலைத்தளத்திலும் பிரச்சாரம் மேற்கொள்கிறேன்” என்றும் தெரிவித்தார். முன்னதாக இயக்குநர் ராஜூமுருகன், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட் டணியில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடும் பி.ஆர்.நடராஜனை ஆதரித்து கோவை சிவானந்தபுரம், சின்னவேடம்பட்டி, நஞ்சேகவுண்டன் புதூர் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.