கோவை, ஏப்.10- நலிந்து போயுள்ள தொழில் வளர்ச்சியை மீட்கவும் கோவை மாநகரத்தின் அமைதியை காக்கவும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மார்க்சிஸ்ட் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக 20 அமைப்புகளை உள்ளடக்கிய அமைதிக்கான மக்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தில் புதனன்று செய்தியாளர்களை சந்தித்த அக்கூட்டமைப்பினர் கூறுகையில், ஜி.எஸ்.டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால் சுயமாக உருவான கோவையின் தொழில்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் மீது ஏற்கனவே பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளது. அவர்கள் (பாஜக) மீண்டும்ஆட்சிக்கு வந்தால் 20 ஆண்டுகளுக்கு முன்பு கோவை சந்தித்த மத மோதல்களை மீண்டும் சந்திக்க நேரிடும். ஆகவே, நீட் தேர்வு ரத்து, ஜி.எஸ்.டி வரி குறைப்பு உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ள திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரிக்க முடிவு செய்துள்ளோம். மேலும், எளிமையாக அணுக கூடியவரும், ஏற்கனவே எம்.பியாக இருந்து பல்வேறு சாதனைகளை செய்துள்ளவருமான மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை தொகுதி வேட்பாளர் பி.ஆர்.நடராஜனை ஆதரித்து தீவிர பிரச்சாரமும் மேற்கொள்ள உள்ளோம் என தெரிவித்தனர்.மேலும், பாஜகவினர் இந்த தேர்தலில் பெரும் தோல்வியை தழுவுவார்கள் என்பதையறிந்து சாதாரண ஏழை, எளிய தலித் மக்களின் வாக்குகளை பெறுவதற்குபண விநியோகத்தை செய்வதாய் தகவல்கள் வருகிறது. பாஜக மீதுஅனைத்து தரப்பு மக்களும் கடும்அதிருப்தியில் உள்ள நிலையில் அவர்களின் பண விநியோகம் உள்ளிட்ட எத்தகைய முயற்சிகளும் வெற்றிபெறாது எனவும் தெரிவித்தனர். முன்னதாக, இக்கூட்டமைப்பின் சார்பில் திமுக கூட்டணியைஆதரித்தும், பி.ஆர்.நடராஜன்அவர்களுக்கு வாக்களிக்க வலியுறுத்தியும் கூட்டறிக்கையை வெளியிட்டனர். இந்தசந்திப்பின்போது கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் விநாயகம், கார்க்கி, வெண்மணி, மேக்மோகன், நிர்மல்குமார், வழக்கறிஞர் ஜோதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.