politics

img

பெண் உரிமை, கல்வி உரிமைக்காக களத்தில் உடன்நின்று போராடிய பி.ஆர்.நடராஜனுக்கு ஆதரவு கேட்டு மாதர், மாணவர், வாலிபர் சங்கத்தினர் பிரச்சாரம்

கோவை, ஏப்.15- பெண் உரிமை, கல்வி உரிமைக்காககளத்தில் உடன்நின்று போராடிய மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை தொகுதி வேட்பாளர் பி.ஆர்.நடராஜனுக்கு ஆதரவு கேட்டு மாதர் சங்கம் மற்றும் மாணவர், வாலிபர் சங்கத்தினர் தீவிர வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.17 ஆவது மக்களவை தேர்தலுக்கான வாக்குபதிவு ஏப்.18ல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரிப்பது என அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகியவற்றின் மாநிலக்குழுக்கள் முடிவெடுத்துள்ளன. இதனையடுத்து மாநிலம் முழுவதும் இவ்வமைப்பினர் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதன்ஒருபகுதியாகவும், பெண் உரிமை, கல்வி உரிமைக்கான பல்வேறு போராட்டங்களில் தங்களுடன் இணைந்து களத்தில் போராடிய கோவை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜனை ஆதரித்து கோவையில் மாதர் மற்றும் மாணவர் சங்கத்தினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன்ஒருபகுதியாக மாணவர் சங்கத்தினர் இருசக்கர வாகனப் பேரணிநடத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். பாப்பம்பட்டி பிரிவில் தொடங்கிய வாகனப் பேரணியை இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வி.மாரியப்பன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பிரச்சார பயணம் இருகூர் ஒண்டிப்புதூர் சிங்காநல்லூர், ஹோப் காலேஜ் தண்ணீர்பந்தல், விளாங்குறிச்சி, சரவணம்பட்டி, துடியலூர், கவுண்டம்பாளையம், கவுண்டர் மில்ஸ், சிவானந்த காலனி, சித்தாபுதூர்,பழையூர், புலியகுளம் உள்ளிட்ட பகுதியில் நிறைவடைந்தது. 


இதேபோல், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் கோவை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். காந்திபுரம் அருகேயுள்ள சித்தாபுதூர் பகுதியில் துவங்கியபிரச்சார இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் துவக்கிவைத்தார். இந்த பயணம் புலியகுளம், இராமநாதபுரம், காமராஜபுரம், தியாகிகுமரன் வீதி, சுந்தரம் வீதி, வடவள்ளி, இடையர்பாளையம், கவுண்டம்பாளையம், கணபதி, ரத்தினபுரி உள்ளிட்ட பகுதியில் பிரச்சாரம் செய்தனர். மாணவர் மற்றும் மாதர் சங்கத்தின் பிரச்சார இயக்கம் பெண்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.


பல்லடம்


கோவை நாடாளுமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனுக்கு ஆதரவாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இருசக்கர வாகனப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.பல்லடம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருப்பூர் தெற்கு ஒன்றிய பகுதிகளில் திங்களன்று இரு குழுக்களாக இந்த பிரச்சாரப் பயணம் நடைபெற்றது. முதலிபாளையத்தில் இருந்து தொடங்கிய இருசக்கர வாகனப் பிரச்சாரப் பயணத்தை திமுக மாவட்டப் பொருளாளர் ரத்தினசாமி கொடியசைத்து தொடக்கி வைத்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.மூர்த்தி, முன்னாள் ஊராட்சித் தலைவர் விஸ்வலிங்கசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சுமார் 50 இருசக்கர வாகனங்களில் வாலிபர்கள் முதலிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறுபகுதிகள் வழியாக முத்தணம்பாளையம் பழைய ஊராட்சிக்கு உட்பட்ட இப்போதைய மாநகராட்சிப் பகுதிகளுக்குள் பிரச்சாரம் செய்தனர். நிறைவாக பழவஞ்சிபாளையம் வழியாக வீரபாண்டியை வந்தடைந்தனர்.அதேபோல் மற்றொரு பிரச்சாரப் பயணம் மங்கலம் கிராமத்தில் இருந்து தொடங்கியது. மாவட்டத்தலைவர் பி.ஞானசேகரன் தொடக்கி வைத்தார். மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்கள், இடுவாய் ஊராட்சி கிராமங்கள், முந்தைய முருகம்பாளையம் ஊராட்சியைச் சேர்ந்த தற்போதைய மாநகராட்சிப் பகுதிகள் வழியாக வீரபாண்டியை வந்தடைந்தனர். இந்த பயணக்குழுவில் 60க்கும் மேற்பட்ட வாகனங்களில் வாலிபர்கள் பங்கேற்றனர்.


இந்த இரு குழுக்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறைவாக வீரபாண்டி பேருந்து நிலையத்தில் தங்கள் பிரச்சாரப் பயணத்தைமுடித்தனர். அங்கு வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலாளர் எஸ்.கண்ணன் பயணத்தை நிறைவு செய்து வைத்து வேட்பாளர் பி.ஆர்.நடராஜனுக்கு ஆதரவு கோரி உரையாற்றினார்.வாலிபர் சங்க திருப்பூர் மாவட்டத் தலைவர் ஞானசேகர் தொடங்கி வைத்தார். வடக்கு ஒன்றியத் தலைவர் சதீஷ், ஒன்றியச் செயலாளர் அருள், வேலம்பாளையம் நகர நிர்வாகிகள் நவநீதன், ஹனீபா, தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் உமாசங்கர், பிரகாஷ், தெற்கு மாநகர நிர்வாகிகள் சஞ்சீவ், ஜீவா, இந்திய மாணவர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் முகிலன், மாவட்டச் செயலாளர் சம்சீர் அகமது உள்ளிட்டோர் பங்கேற்று வாக்கு சேகரித்தனர்.