இடி மேகங்கள் பல கிலோமீட்டர்கள் அடர்த்தியானவை.அவை அடிப்பக்கத்தில் எதிர் மின்னேற்றமும் மேல்பக்கத்தில் நேர் மின்னேற்றமும் கொண்டவை.இந்த மின் அழுத்தத்தை அளக்க வேண்டுமென்றால் பல மணி நேரங்கள் பறந்துதான் செய்ய முடியும்.ஆனால் இடிமின்னல் 15-2௦ நிமிடங்கள்தான் நீடிக்கும்.எனவே இந்த முறையில் அவற்றை அளக்க முடியாது.முதன்முதலாக ஊட்டியிலுள்ள கிரேப்ஸ்-3 எனும் தொலைநோக்கி ஆய்வு மையம் இடிமேகத்தின் மின் அழுத்தம்,பரப்பு,உயரம் ஆகியவற்றை கணக்கிட்டுள்ளது. இந்த ஆய்வு மையம் முவான்(muon) என்ற மின் துகள்களை அளக்கவே ஏற்படுத்தப்பட்டது.பூமியின் காற்று மண்டலத்திலுள்ள அணுக்களுடன் காஸ்மிக் கதிர்கள் மோதும்போது முவான் துகள்கள் உண்டாகின்றன.இடிமேகங்களும் இவற்றின் மீது தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.
2011ஆம் ஆண்டிலிருந்து 2014ஆம் ஆண்டு வரை இப்படிப்பட்ட தாக்கங்களை 184 முறை ஆய்வு செய்தனர்.அதில் ஏழு முறை மட்டும் பெரிய அளவு மாற்றங்களைப் பார்த்தனர்.அதில் ஒன்றே ஒன்றுதான் ஒப்புருவாக்கும்(simulate) அளவிற்கு எளிமையாக இருந்தது.அதை கணினியில் ஒப்பிட்டு மின் அழுத்தத்தை அளவிட்டதில் 1.3 கிகா வோல்ட்(GV)எனத் தெரிந்தது.
இடி மேகத்தின் மின் அழுத்தம்,பரப்பு,உயரம் ஆகியவற்றை ஒரே சமயத்தில் அளப்பது இதுவே முதன்முறை என்கிறார் இந்த ஆய்வுக் கட்டுரையின் ஆசிரியர் சுனில் குப்தா. மேலும் மின்னலுடன் தோன்றும் ஒளிப் பிழம்புகள் கோட்பாட்டு ரீதியாக இதுவரை விளக்கப்படவில்லை.25 ஆண்டுகாலப் புதிரை விடுவிக்க இது உதவும் என்று முனைவர் குப்தாவும் அவருடைய குழுவினரும் ஊகிக்கிறார்கள். இடி மேகங்களின் குணாம்சங்களைப் பற்றிய புரிதல் விமானங்களை செலுத்துவது,மின் குறுக்கோட்டத்தை(short circuits) தடுப்பது ஆகியவற்றில் பயன்படும்.
சுபஸ்ரீ தேசிகன் இந்து ஆங்கில நாளிதழ் (24/03/2019)