tamilnadu

img

காட்டுக்குள் தாது சத்துக்கள் நிறைந்த உப்புக்கட்டிகள்

மே.பாளையம், மே 9-வறட்சியால் வன உயிரினங்களுக்கு ஏற்படும் உடல் நலக்குறைபாடுகளை போக்க காட்டுக்குள்தாது சத்துக்கள் நிறைந்த உப்புக்கட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. கோவை வனக்கோட்டத்திற்குஉட்பட்ட மேட்டுப்பாளையம் வனச்சரக பகுதி சுமார் 23 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள இவ்வனப்பகுதியில் யானை, புலி,சிறுத்தை, கரடி, காட்டெருமைகள், மான், செந்நாய் என ஏராளமான வன உயிரினங்கள் உள்ளன. இவ்வாண்டு பெய்ய வேண்டிய பருவமழை பொய்த்துப்போன நிலையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதாலும் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. வன உயிரனங்களின் தாகம்தீர்க்க உதவும் வன குட்டைகள், நீரோடைகள் என அனைத்து நீராதாரங்களும் வறண்டு வருகின்றன. செடி கொடிகள் மற்றும் மரங்களும் காய்ந்து சருகாகி வருகின்றன. இதனால் பசுமை இழந்து காணப்படும் காட்டுக்குள் வன உயிரினங்களுக்கு போதிய உணவோ நீரோ இன்றி அவை தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது போன்ற சூழலில் விலங்கினங்களின் இயல்பான நோய்எதிர்ப்பு திறன் குறையும். இதனால் அவை பலவீனமடைந்து எளிதில் பல்வேறு நோய் தாக்குதல்களுக்கு உள்ளாகின்றன. இதனை கருத்தில் கொண்டு யானை உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் தாகம் தீர்க்கும் வகையில் வனஎல்லைகளில் செயற்கை தொட்டிகளை கட்டி அதில் நீர் நிரப்பும் பணியில் வனத்துறை ஈடுபட்டு வருகிறது. இந்த தண்ணீர் தொட்டிகளை தேடி யானை கூட்டங்கள் உள்ளிட்ட அனைத்து வகை விலங்கினங்களும் வந்தபடி உள்ளன. மேலும் வறட்சி கால உடல் பாதிப்பை தடுக்கும் வகையில் மிருகங்களின் உடலுக்கு தேவையான அனைத்து தாது சத்துக்கள்அடங்கிய உப்புக்கட்டிகளை வைக்கும் பணியினை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக தண்ணீர் தொட்டிகளை தேடி விலங்கினங்கள் தினசரி கூட்டம் கூட்டமாக வருவதால் தொட்டிகளின் அருகிலேயே தாதுஉப்புக்கட்டிகள் வைக்கப்படுகின்றன. தண்ணீர் தொட்டிகளில் உள்ள நீரை அருந்த வரும் யானை, மான், காட்டெருதுகள் உள்ளிட்ட வன விலங்குகள் இந்த உப்புக்கட்டிகளையும் சுவைத்து உண்ணும் போது அதன் உடலிற்குத் தேவையான சத்துக்கள் கிடைத்து, நோய் எதிர்ப்புத் திறனும் மேம்படும் என வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.