திருப்பூர், ஏப். 30 -சாலைப்பணியாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் தண்டோரா போட்டுத் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றும் சாலைப் பணியாளர்களுக்கு 41 மாத கால பணி நீக்க காலத்தை பணிக் காலமாக அறிவித்து ஆணை வழங்குவதுடன், தனியார் மயத்தைக் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட அடிப்படைக் கோரிக்கைகளை முன்வைத்து திருப்பூர் நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளர் அலுவலகம் முன்பாக செவ்வாயன்று இப்போராட்டம் நடைபெற்றது.அரசு ஊழியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் மு.சுப்பிரமணியன் இப்போராட்டத்தைத் தொடங்கி வைத்தார். சாலைப் பணியாளர்கள் தண்டோரா போட்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். கோட்டச் செயலாளர் ஆர்.ராமன் வரவேற்றார். திருப்பூர் என்.சிவக்குமாரன், ஈரோடு கே.சிவக்குமார், தாராபுரம் கே.வெங்கிடுசாமி, கரூர் கே.செவந்திலிங்கம் ஆகியோர் தலைமை ஏற்றனர். கோரிக்கைகளை விளக்கி தாராபுரம் எல்.தில்லையப்பன், கரூர் பி.பழனிச்சாமி, ஈரோடு ஏ.ரங்கசாமி ஆகியோர் உரையாற்றினர். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.பாஸ்கரன், தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்க மாநிலச் செயலாளர் மு.சீனிவாசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதில் திருப்பூர் கோட்டத்தைச் சேர்ந்த ஏராளமான சாலைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தை நிறைவு செய்து வைத்து மாநிலத் தலைவர் மா.பாலசுப்பிரமணியன் சிறப்புரை ஆற்றினார். கோட்டப் பொருளாளர் செ.முருகசாமி நன்றி கூறினார்.