ஈரோடு, ஏப்.7-ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மதிமுக சார்பில் போட்டியிடும் அ.கணேசமூர்த்தி ஞாயிறன்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டார். காலையில் ஈரோடு வஉசி பூங்கா பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டவர்களிடம் வாக்குகள் சேகரித்தார்.அப்போது அவர் பேசியதாவது, நான் எம்.பி.யாக இருந்த காலத்தில் ஈரோடு மக்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன். குறிப்பாக ஈரோடு மக்களுக்கு தூய்மையான குடிநீர் வழங்கவேண்டும் என்பதற்காக ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்திற்காக அப்போதைய மத்திய அமைச்சர் கமல்நாத்திடம் பேசி நிதி ஒதுக்கி கொடுத்துள்ளேன். இதேபோல் சாஸ்திரி நகர் பகுதி மக்கள் ரயில்வே தண்டவாளத்தை கடக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது.
இதற்காக சாஸ்திரிநகர் பகுதியில் மேம்பாலம் கட்டி கொடுத்துள்ளேன். இவ்வாறு மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்துள்ளேன். தற்போதைய மத்திய, மாநில அரசுகள் மக்கள் விரோத அரசுகளாக உள்ளது. விவசாய விளை நிலங்களை பாதிக்கும் வகையில் உயர்மின் கோபுரம் அமைக்கும் திட்டம், மீத்தேன் திட்டம், கெயில் திட்டம் போன்ற திட்டங்களை கொண்டு வருகிறார்கள். விவசாயிகளை பாதிக்கும் திட்டத்தை எதிர்த்து தொடர்ந்து விவசாயிகளுடன் இணைந்து போராட்டங்களை நடத்தி வருகிறேன். திமுக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து அறிவித்துள்ளார்கள். மத்தியில் காங்கிரசும், மாநிலத்தில் திமுகவும் ஆட்சிக்கு வந்தவுடன் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும். விவசாயிகள் பெற்ற கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும். விவசாய கூலி தொழிலாளர்கள் மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள அனைவருக்கும் மாதம் 6 ஆயிரம் ரூபாய் வீதம் ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள் வங்கிகளில் பெற்ற கல்வி கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும். தமிழக மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அ.கணேசமூர்த்தி பேசினார். இந்த வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.