tamilnadu

img

வருங்கால வைப்பு நிதியினை முறையாக பிடித்தம் செய்து வழங்கிடுக - சிஐடியு மனு

பொள்ளாச்சி, மே 10 -தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியினை முறையாக பிடித்தம் செய்து வழங்கிடக்கோரி பொள்ளாச்சியில் உள்ள மத்திய தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்பு, வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர குறைதீர் கூட்டத்தில் சிஐடியு சார்பில் மனு அளிக்கப்பட்டது. மத்திய தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி மாவட்ட அலுவலகத்தில் மாதாந்திர குறைதீர்ப்புக் கூட்டம் வெள்ளியன்று உதவி ஆணையாளர் எம்,எஸ்.அனந்தராமன் தலைமையில் நடைபெற்றது. இதில்திருப்பூர் மாவட்டம் உடுமலையிலுள்ள பஞ்சாலையில் வேலை செய்யக்கூடிய தொழிலாளர்கள் தினக்கூலி மற்றும் பழுகுநர் (அப்ரன்டீஸ்) வாரக்கூலி, மாதக்கூலி என நான்கு வகையாக பிரிக்கப்பட்டு வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர் . பஞ்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் வருங்கால வைப்பு நிதியினை பஞ்சாலை நிர்வாகங்கள் முறையாக பிடித்தம் செய்வதில்லை. இதில் நிறைய குளறுபடிகள் செய்கின்றனர்.அதேபோல வேலை நாட்களையும் குறைத்து பொய்யான கணக்குகளை காண்பித்து வைப்பு நிதியினைஏமாற்றி வருகின்றனர். இரண்டு விதமான கணக்குகளை பராமரித்துதொழிலாளர்களை ஏமாற்றும் வேலைகளில் உடுமலை பஞ்சாலைகள் செயல்பட்டுவருகின்றன.இதனை உடனடியாக கள ஆய்வு செய்து அந்தந்த ஆலைகள் மீதுநடவடிக்கை எடுத்து, தொழிலாளர்களின் பணி மற்றும் சட்ட பாதுகாப்புகளை உறுதி செய்யவேண்டும். தொழிலாளர்களின் தனிக்கணக்கு எண் போன்ற ஆவணங்களில் குளறுபடிகளை ஏற்படுத்தும் ஆலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியு பஞ்சாலைத் தொழிலாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் ரமேஷ், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் கோரிக்கை மனு அளித்தனர்.