அவிநாசி அருகே சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி
அவிநாசி, மே 17-அவிநாசி அருகே நடைபெற்ற சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள கன்னம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (30). இவர் தனதுமனைவி தமிழ்செல்வி(26), மகன் ஈஸ்வரன் (6), மகள் நித்திகா (3) ஆகியோருடன் தனது இருசக்கர வாகனத்தில் சொந்த ஊரான வேலூர் மாவட்டம் குடியாத்தத்திற்கு சென்றுவிட்டு வெள்ளியன்று சூலூர் திரும்பிக் கொண்டிருந்தார். அவிநாசி பைபாஸ் சாலையில் வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுவன் ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும், பலத்த காயமடைந்த ரமேஷ், தமிழ்ச்செல்வியும் அவிநாசி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைபெற்றுவிட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி ரமேஷ் மற்றும் தமிழ்ச்செல்வி ஆகியஇருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் 3வயது குழந்தை நித்திகா உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து அவிநாசி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காலமானார்
கோவை, மே 17- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை வடக்கு நகரக்குழு உறுப்பினரும், தீக்கதிர் நாளிதழின் முகவருமான எம்.கணேசன் அவர்களின் மனைவியும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கோவை வடக்கு நகரக்குழு உறுப்பினரும், பாரதிநகர் சிபிஎம் கிளை உறுப்பினருமான ஜி.சாந்தாமணி வியாழனன்று காலமானார். இவரின் மறைவை அறிந்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சிபிஎம் வடக்கு நகரக்குழு செயலாளர் என்.ஆர்.முருகேசன், தீக்கதிர் கோவை பதிப்பின் பொதுமேலாளர் எஸ்.ஏ.மாணிக்கம் உள்ளிட்டோர் மறைந்த சாந்தாமணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.