tamilnadu

img

திருப்பூரில் அசுர வேக மினி பேருந்தில் சிக்கி ஒருவர் பலி நடைபாதை இல்லாததால் தொடர்ந்து விபத்தில் சிக்கும் அவலம்

திருப்பூர், ஏப். 25 -திருப்பூர் நகரின் போக்குவரத்து நெருக்கடி மிக்க டவுன்ஹால் பகுதியில் அசுர வேகத்தில் இயக்கப்பட்ட மினி பேருந்து மோதியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.திருப்பூர் நேரு வீதி டவுன்ஹால் சந்திப்பில் இருந்து ரயில் நிலையம் செல்லும் சாலையில் எப்போதும் போக்குவரத்து நெருக்கடி மிக அதிகமாக இருக்கும். இந்நிலையில் வியாழனன்று மதியம் 1 மணியளவில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது நேரு வீதியில் இருந்து ரயில் நிலையம் நோக்கி மினி பேருந்து ஒன்று அசுர வேகத்தில் வந்து கொண்டிருந்தது. போக்குவரத்து நெருக்கடியும், பாதசாரிகள் நடமாட்டமும் அதிகம் இருக்கக்கூடிய இப்பகுதியில் வேகமாக வந்த மினி பேருந்து, சாலையோரம் பக்கவாட்டில் நடந்து சென்று கொண்டிருந்தவர் மீது இடித்துள்ளது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்தவர் மினி பேருந்தின் பின்சக்கரத்தின் முன்பாக சிக்கிக் கொண்டார். சுமார் 20 அடி தூரத்துக்கு மினி பேருந்து அவரை இழுத்துக் கொண்டு சென்றது. இதில் அவர் பலத்த காயமடைந்தார்.உடனடியாக அப்பகுதியில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் வாகனம் வராத நிலையில் கடுமையான வெயிலில் அப்பகுதி மக்கள் துணியை விரித்து காயமடைந்தவருக்கு நிழல் ஏற்படுத்தி பாதுகாப்புக் கொடுத்தனர். சுமார் அரை மணி நேரம் ஆன நிலையில் தனியார் ஆம்புலன்ஸ் வாகனம் சம்பவ இடத்துக்கு வந்தது. உடனடியாக படுகாயம் அடைந்தவரை ஆம்புலன்ஸில் ஏற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போகும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.காவல்துறை விசாரணையில் அவர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி (50) என்று தெரியவந்தது. விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் சம்பவம் நடந்தவுடன் பேருந்தில் இருந்து இறங்கி தப்பி ஓடினார். இந்த விபத்தை வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.மாநகரில் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த இப்பகுதியில் நடைபாதை இருந்தும் இல்லாத நிலையே உள்ளது. குறுகலான நடைபாதைகளில் கடைக்காரர்கள் தங்கள் பொருட்களைக் குவித்து வைத்து விற்பனை செய்கின்றனர். அத்துடன் நடைபாதையை ஒட்டி சாலையில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு விடுகின்றன. இதனால் பாதசாரிகள் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சாலை ஓரத்திலேயே நடந்து செல்ல வேண்டியிருக்கிறது. குறிப்பாக ரயில் நிலையம் இருக்கும் இப்பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கானோர் நடந்து செல்லக்கூடிய பகுதியாக உள்ளது. எனினும் நடைபாதை மற்றும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் ஏற்பாடு இல்லாததால் அநியாயமாக உயிரிழப்பு விபத்துகள் இங்கு நடைபெறுகின்றன. இதைத் தடுக்க மாநகராட்சி, காவல் துறை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.