இருள் நீக்கிய முன்னணிச் செயல்பாட்டாளர்களில் ஒருவர்
ஜி.ராமகிருஷ்ணன்
இயக்க வளர்ச்சி க்கு திருவாரூர் மாவட்டத்திலிருந்து பங்களித்த பல மூத்த தோழர்களை “களப்பணியில் கம்யூ னிஸ்ட்டுகள்”‘ பதி வுகளில் பார்த்திருக் கிறோம். இப்போது சந்திக்கவிருப்பது தோழர் எஸ்.தங்கராசு. மன்னார்குடி வட்டம் கோட்டூர் ஒன்றியம் இருள் நீக்கி கிராமத்தில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒரு விவசாயத் தொழிலாளி குடும்பத்தில் 1946ஆம் ஆண்டில் பிறந்தவர். உடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரிகள். வறுமை காரணமாக இவரால் எட்டாம் வகுப்புக்கு மேல் பள்ளிப் படிப்பைத் தொடர முடியவில்லை. சிறு வயதிலேயே தந்தை யுடன் ஒரு விவசாயத் தொழிலாளியாக வயலில் இறங்கினார்.
இளம் வயதிலேயே கம்யூனிஸ்ட்
ஒரே மாவட்டமாக இருந்த தஞ்சையில், குறிப்பாக கீழத்தஞ்சையின் மன்னார்குடி வட்டம் பலமான கம்யூனிஸ்ட் இயக்கம் உரு வான பகுதியாகும். களப்பால் குப்பு, அமிர்த லிங்கம், பட்டுராசு, ஏ. நடராஜன் போன்ற முன்னோடித் தலைவர்களை கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு இந்த மன்னார்குடி வட்டம் வழங்கியுள்ளது. 1940களின் முற்பகுதியில் கோட்டூர் ஒன்றி யம் தென்பறை கிராமத்தில் முதன்முதலாக தோழர் பி. சீனிவாசராவ் விவசாயிகள் சங்க கொடியேற்ற, அங்கே விவசாயிகள் சங்க அமைப்பு உருவானது. இருள்நீக்கியிலும் மன்னார்குடி வட்டம் முழுவதிலும் குத்தகை விவசாயிகள் போராட்டமும், விவசாயத் தொழிலாளர்கள் இயக்கமும், வலுவாக வளரத் தொடங்கிய பின்னணியில் தங்கராசு அந்த இளம்வயதிலேயே கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். கட்சியின் மாநிலத் தலைவர்களில் ஒருவ ரான தோழர் எம்.ஆர்.வெங்கட்ராமனிடமிருந்து கட்சி உறுப்பினர் பதிவுக்கான ரசீது பெற்றதை இப்போதும் பெருமையாகக் கருதுகிறார். தென்பறையின் குத்தகை விவசாயிகள் போராட்டத்தின் பலனாக ஏற்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தை மிராசுதார்கள் தன்னிச்சையாக மீறி குத்தகை விவசாயிகளை நிலத்தைவிட்டு வெளியேற்ற முற்பட்டனர். அதே காலத்தில் விவசாயத் தொழிலாளர்களுடைய கூலி உயர்வுக்கான போராட்டமும் தொடங்கியது. 1950களில் கீழத்தஞ்சை முழுவதும் குத்தகை விவசாயிகளும் (பிற்படுத்தப்பட்ட சமூகங் களைச் சேர்ந்தவர்கள்) விவசாயத் தொழி லாளர்களும் (பெரும்பாலும் பட்டியல் சமூகத் தவர்) இணைந்து போராட்டக் கள மிறங்கினார்கள். இருள்நீக்கியில் மிராசு தார் நாராயணசாமி ஐயர் அவருடைய நிலத்திலிருந்து குத்தகை விவசாயிகளை வெளியேற்ற முயன்றார். குத்தகை விவசாயி களும், விவசாயத் தொழிலாளர்களும் கைகோர்த்த போராட்டங்களால் அது தடுக்கப்பட்டு மிராசுதாரர்களுக்கும் குத்தகை விவசாயிகளுக்குமிடையே உடன்பாடு ஏற்பட்டது.
சிறைவாசத்தில் பெருமிதம்
கேரளத்தில் இ.எம்.எஸ். அரசு கொண்டு வந்த நில உச்சவரம்பு சட்டத்தைப் போல தமிழகத்திலும் சட்டமியற்றி உபரி நிலத்தை விநியோகிக்கக் கோரி 1961இல் மாநிலம் முழுவதும் விவசாயிகள் சங்கம் மறியல் போராட்டத்தைத் தொடங்கியது. அதில் கலந்து கொண்ட மற்ற தோழர்களோடு தங்கராசுவும் கைது செய்யப்பட்டார். நான்கு மாதங்கள் திருச்சி சிறையில் இருந்ததைத் தெரிவித்தவரின் வார்த்தைகளில் எவ்வளவு பெருமிதம்! 1963இல் தங்கராசு கட்சியின் இருள்நீக்கி கிளைச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். 1964இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உரு வானபோது தன்னையும் இணைத்துக் கொண்டார். 1967 பொதுத்தேர்தலில் நாகை மக்களைவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக தோழர் வி.பி. சிந்தன் போட்டியிட்டார். அப்போது தேர்தல் களத்தில் பணியாற்றியதையும் தங்கராசு தெரிவித்தார். அந்தத் தேர்தலில் வி.பி. சிந்தன் வெற்றி வாய்ப்பை இழந்தாலும், மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முக்கியமான அரசியல் சக்தியாக உருவெடுத்திருந்ததை அவருக்குக் கிடைத்த வாக்குகள் சுட்டிக் காட்டின. கட்சி உருவான பிறகு நடைபெற்ற மன்னார்குடி வட்ட மாநாட்டில் தங்கராசு வட்டக் குழுவிற்குத் தேர்வு செய்யப்பட்டார். விவசாயிகள் சங்க மன்னை தாலுகா செய லாளராகவும் செயல்பட்டார்.
கூலி உயர்வுக்கான போராட்டம்
1968 அக்டோபர், நவம்பர் மாதங்களில் கீழத்தஞ்சை முழுவதும் விவசாயத் தொழி லாளர்களின் கூலி உயர்வுக்கான போராட்டங் கள் நடைபெற்றன. மாவட்டமே போர்க்களம் போலத் திகழ்ந்தது. அந்தப் போராட்டத்தில் இருள்நீக்கியில் தங்கராசு முக்கியப் பங்காற்றினார். 1970களில் அந்தக் கிராமத்தில் நடந்த போராட்டத்தைத் தொடர்ந்து மிராசு தார்கள் ஒப்பந்தந்திற்கு வந்தார்கள். 1960 களில் துவங்கி அடுத்து 30 ஆண்டுகளில் பலமுறை கூலி உயர்வுக்கான போராட்டம் நடைபெற்றிருக்கிறது. இப்போராட்டங்களில் எல்லாம் தோழர் தங்கராசு முன்னணி பாத்திரம் வகித்திருக்கிறார்.
ஏழை விவசாயிகளுக்காக டீ மட்டுமே கூலியாகப் பெற்ற தொழிலாளர்கள்
நிலச்சுவான்தார்கள், பணக்கார விவ சாயிகள் ஆகியோர்களுக்கு எதிராக கூலி உயர்வுக்கான போராட்டம் நடைபெறுகிற போது சிறுகுறு விவசாயிகளின் நிலைமை களை கணக்கில் எடுத்துக் கொண்டு கம்யூ னிஸ்ட் கட்சியும், விவசாய தொழிலாளர் சங்க மும் தங்களது அணுகுமுறையை உருவாக்க வேண்டுமென்று கட்சி தங்களுக்கு வழி காட்டியுள்ளது என்று தங்கராசு குறிப்பிட்டார். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சார்ந்த சிறுகுறு நடுத்தர விவ சாயிகளையும் உள்ளடக்கியதுதான் விவசாயி கள் சங்கம். ஏழை விவசாயிகள் விவசாய தொழிலாளர் சங்கத்தில் உறுப்பினராக இருப்பார்கள். இவர்களை கணக்கில் கொண்டு தான் நாங்கள் போராட்டம் நடத்துவோம் என்றார் தோழர் தங்கராசு. ஒருமுறை, சிறுகுறு விவசாயிகளும், ஏழை விவசாயிகளும் முந்தைய ஆண்டில் தங்களின் சாகுபடி பொய்த்துப் போனதால் நிலச்சுவான்தார்களோடு ஏற்பட்ட ஒப்பந்தப்படி கூலி தர இயலாது என்று கூறினார்கள். இதனால், சிறுகுறு விவசாயி களின் வயல்களில் சாகுபடி நடைபெற வில்லை. இப்பின்னணியில் கட்சிக் கிளையும், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் சங்கக் கிளைகளும் கூடி சிறுகுறு, ஏழை விவசாயிகளிடம் கூலி பெறாமல், டீ மட்டும் பருகிக்கொண்டு வேலை செய்வதென முடிவு செய்தன. அப்படியே வேலை செய்த இருள்நீக்கி தொழிலாளர்கள் பரவலாகப் பாராட்டைப் பெற்றனர். இத்தகைய அணுகு முறை நிலப்பிரபுத்துவச் சுரண்டலுக்கும் தீண்டாமைக் கொடுமைக்கும் எதிராகப் பிற்படுத்தப்பட்ட – பட்டியல் சமூகங்களைச் சார்ந்த மக்களை ஒன்றிணைத்து போராடுகிற சூழலை வலுப்படுத்தியது. குத்தகை விவசாயிகளுக்கான பொது வான போராட்டம் ஒருபுறமிருக்க, தனிப்பட்ட முறையில் குறிப்பிட்ட ஒருவரை நிலத்தி லிருந்து வெளியேற்ற மிராசுதார் முயன்றால், அதில் கட்சி தலையிட்டு அவருக்கு அரணாக நிற்கும். 1977இல் குன்னியூரில் பேச்சிமுத்து என்கிற குத்தகை விவசாயியை, மிராசுதார் நீதிமன்ற ஆணை பெற்றதைத் தொடர்ந்து, நிலத்திலிருந்து வெளியேற்ற வந்தது காவல்துறை. தகவலறிந்த தங்கராசு இருள்நீக்கியிலிருந்து ஆண்களையும் பெண்களையும் திரட்டிச் சென்றார். கையில் நாற்றுக்கட்டுகளுடன் சென்ற அவர்கள் அந்த நிலத்தில் நடவு வேலையை செய்து முடித்தார்கள். பேச்சிமுத்துவின் குத்தகை நில உரிமை நிலைநாட்டப்பட்டது.
நிலத்திற்கான போராட்டம்
1967ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தபோது சட்டத்தைத் திருத்தி, நில உடைமைக்கான உச்சவரம்பு 30 ஏக்கர் என்றிருந்ததை 15 ஏக்கராகக் குறைத்தது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கீழத்தஞ்சை முழுவதும் உச்சவரம்பு அளவுக்கு மேலுள்ள உபரி நிலத்தைக் கையகப் படுத்தி விநியோகிக்கக் கோரி தொடர் போராட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி முன்னெடுத்தது. நிலத்திற் கான போராட்டத்தின் போது மோதல் ஏற்பட்டு ஒருமுறை தோழர் தங்கராசு கைது செய்யப் பட்டு நான்கு மாதம் சிறைப்படுத்தப்பட்டார். குன்னியூர், பெரியகுடி, நெருஞ்சனங்குடி உள்ளிட்ட கிராமங்களில் நிலமற்ற விவ சாயத் தொழிலாளர்களுக்கு உபரி நிலத்தை வருவாய்த் துறை அதிகாரிகள் விநியோகித் தார்கள். அந்தப் போராட்டத்தில் என். மணியன். தங்கராசு உள்ளிட்டோர் முன்னணிப் பங்களித்தனர்
. இளையோருக்கு ஒரு முன்னுதாரணமாக...
2000ஆம் ஆண்டில் மே 31 அன்று கோட்டூர் இடைக்குழு இடைக்காலப் பரிசீலனை நடைபெற்றது. அதில் தங்கராசு செயலாள ராகத் தேர்வுசெய்யப்பட்டார். அப்போது மாவட்டச் செயலாளர் என். கோவிந்தராஜ். 2006இல் நடைபெற்ற மாவட்ட மாநாட்டில் தங்கராசு மாவட்ட செயற்குழுவுக்குத் தேர்வு செய்யப்பட்டார். 2014இல் வயது மூப்பின் காரணமாக மாவட்டக் குழுவிலிருந்து விடுவிக்கப்பட்டார். 1974இல் தங்கராசு - நிர்மலா திருமணம் தோழர் கோ. வீரையன் தலைமையில் நடை பெற்றது. இவர்களுக்கு மூன்று மகள்கள், இரண்டு மகன்கள். இணையரும், பிள்ளைகளும் கட்சி ஆதரவாளர்கள். மகன்கள் லெனின், ஸ்டாலின் ஆகியோரின் திருமணம் ஒரே மேடையில் எனது தலைமையில் நடைபெற்றது. இருள்நீக்கி கிராமத்தைச் சார்ந்த செயற்குழு உறுப்பினராகப் பணியாற்றியவரான மறைந்த ஆர்.குமாரராஜா மற்றும் எல். சண்முகவேல், கல்யாண சுந்தரம், அறிவின் செல்வம், குஞ்சு என பலரையும கட்சிக்குக் கொண்டு வந்தவர் இவர்தான் என்று கிளைத் தோழர்கள் பெருமையோடு குறிப்பிடு கிறார்கள். 1988இல் கட்சியின் கோட்டூர் ஒன்றியக் குழுவிற்கு இடம் வாங்கி அலுவலகம் கட்டப் பட்டது, அதில் தங்கராசுவுக்கு முக்கியப் பங்கிருந்தது. அதன் திறப்பு விழாவிற்கு தோழர் என்.சங்கரய்யா வந்ததை உணர்வுப் பூர்வமாக நினைவு கூர்கிறார். இப்போதும் இருள்நீக்கி கிராமத்தில் மார்க்சிஸ்ட் கட்சி சிறப்பாக இயங்கி வருகிறது. ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கட்சித் தோழர்கள் ஐந்து முறை வெற்றி பெற்றுள்ளார்கள். இப்போது தலைவராக உள்ள செங்கோடி கட்சி உறுப்பினர்தான் (இவ ரது இணையர்தான் பாடகர் குமாரராஜா). சுமார் 2,700 மக்கள் தொகை கொண்ட இருள்நீக்கி ஊராட்சிக்குட்பட்ட கிராமத்தில் இருள்நீக்கி, சின்னகுருவாடி, வடசிராங்குடி, நெருஞ்சனங்குடி ஆகிய நான்கு உட்கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நான்கு கிளை களும், 54 கட்சி உறுப்பினர்களும் உள்ளனர். விவசாயிகள் சங்கம், விவசாய தொழி லாளர்கள் சங்கம், மாதர் சங்கம் ஆகிய வர்க்க வெகுஜன அமைப்புகளின் கிளை களும் உள்ளன. பத்து தீக்கதிர் வருகிறது. நான்கு கிராமங்களிலும் சுமார் 100 கட்சிக் குடும்பங்கள் உள்ளன. கீழத்தஞ்சை மாவட்டங்களில் கட்சிக் கிளைகள் அல்லாமல் வர்க்க வெகுஜன அமைப்புகள் உள்ளவர்கள் தங்களை கட்சியில் இணைத்துக் கொள்ளும் பிரத்யேகமான வடிவம் தான் கட்சிக் குடும்பம். எளியதொரு பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளர் குடும்பத்தில் பிறந்து, கட்சியின் கிளைச் செயலாளராக, இடைக்குழு உறுப்பினராக, செயலாளராக, மாவட்டக் குழு உறுப்பினராக, செயற்குழு உறுப்பினராக என அமைப்புப் பணிகளை அர்ப்பணிப்போடு நிறைவேற்றியவர். கைது, வழக்கு, சிறை போன்ற அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் இயக்கத் தொண்டாற்றியவர். தற்போது உடல்நலம் குன்றிய நிலையிலும் 79 வயதில் இயன்ற பணிகளை நிறைவேற்றி வருகிறார். இருள்நீக்கி ஊராட்சிப் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பலமாக இருப்பதற்கு அடித்தளமிட்டவர்களில் ஒருவரான தோழர் தங்கராசுவின் இயக்க ஈடுபாடு பாராட்டுக்குரியது, பின்பற்றத்தக்கது.
குத்தகை விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளிகளையும் திரட்டுவதில் இருள்நீக்கியில் முன்னணியில் நின்றவர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரான என்.மணியன். பின்னர் ஆலத்தம்பாடி கிராமத்தில் தங்கி கட்சிப் பணியாற்றினார். அதன் ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினராகவும், முழுநேர ஊழியராகவும் செயல்பட்டார். தோழர் பி.சீனிவாசராவ் போன்றோடுடன் பணியாற்றிய அனுபவம் கொண்ட தோழர் என். மணியன், மாவட்டச் செயலாளராக இருந்த என்.கோவிந்தராஜன் மறைவிற்குப் பிறகு, மூன்று மாத காலம் பொறுப்பு மாவட்டச் செயலாளராகவும் பணியாற்றினார். தோழர் மணியன் மறைவுக்குப் பிறகு, அவருடைய குடும்பத்தினர் இப்போதும் கட்சியின் அங்கமாக இயங்குகிறார்கள். ஒருமுறை தோழர் என்.மணியன் மகன் இருள்நீக்கி ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகள் செயல்பட்டிருக்கிறார். இருள்நீக்கி கிராமத்தில் கட்சி மற்றும் வர்க்க வெகுஜன அமைப்புகளை உருவாக்குவதில் தோழர் என்.மணியன் முக்கிய பங்காற்றியிருக்கிறார்.