சேலம், ஜூன் 14- தமிழகம் முழுவதும் காலியாக உள்ள மருந்தாளுநர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தி மருந்தாளுநர் சங்கம் சார்பில் சேலத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 700க்கு மேற் பட்ட மருந்தாளுநர்கள் பணியிடங்களை தமிழக அரசு உடனடியாக நிரப்பிட வேண்டும். மருந்தாளுநர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்திட வேண்டும். ஏழு ஆண்டுகளுக்கு மேலாக நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் மருந்தாளுநர்களை பணிவரன்முறை செய்திட வேண்டும். மேலும், தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தால் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் 32 மாவட்ட மருத்துவக் இடங்களில் மருந்துக் கிடங்கு அலுவலர் பணியிடம் உருவாக்கிட வேண்டும் என வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் முத்துக்குமரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.