விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோவையில் திங்களன்று இரண்டு இடங்களில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் பங்கேற்று கைதாகினர்.
மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனமும், தமிழக அரசின் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் தமிழகத்தின் மேற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல், சேலம், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், விழுப்புரம் ஆகிய 14 மாவட்டங்களில் 12 வழித்தடங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. விவசாயிகளின் விளைநிலங்கள் வழியாக இத்திட்டத்தை நிறைவேற்றக்கூடாது நெடுஞ்சாலையோரம், புதைவட கேபிள் உள்ளிட்ட மாற்று முறையில் செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருந்தனர். இதனையொட்டி கோவையில் சுல்தான்பேட்டை மற்றும் கரும்பத்தம்பட்டி ஆகிய இரு இடங்களில் சாலை மறியல் போராட்டம் திங்களன்று நடைபெற்றது. கோவை சுல்தான்பேட்டை பகுதியில் விவசாயிகள் பாதுகாப்பு சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் தலைமையில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் மதுசூதனன், மாவட்ட தலைவர் வி.பி.இளங்கோவன், செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று கைதாகினர்.
இதேபோல் கோவை கருமத்தம்பட்டியில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் விவசாயிகள் சங்க தலைவர் தங்கராஜ் தலைமை தாங்கினார். இதில் காங்கிரஸ் கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர் வி.எம்.சி.மனோகரன் உள்ளிட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்க தலைவர்கள் கூறுகையில், விளைநிலங்கள் வழியாக உயர் மின் கோபுரம் அமைக்காமல் கேரள மாநிலம் போல் புதைவடம் வழியாக மின்சாரம் கொண்டு செல்லலாம். ஏற்கனவே விளைநிலங்கள் அமைக்கப்பட்ட உயர் மின் கோபுரங்களுக்கு இழப்பீடு தொகை தர வேண்டும். இதே நிலை தொடர்ந்தால் எங்களது போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம் என தெரிவித்தனர்.