கோவை, ஏப். 6-கோவையில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்க மருத்துவமனையும், காவல்துறையினரும் தாமதப்படுத்துவதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது சிறுமியின் தாயார் கூறியதாவது, எனது மகளின் மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். தற்போதுவரை குழந்தையின் பிரேத பரிசோதனைஅறிக்கையை வழங்காமல் காவல்துறையும், மருத்துவமனை நிர்வாகமும் அலைகழித்து வருகின்றனர். மேலும் சில பத்திரிகைகளில் குழந்தை தொடர்பாக தவறான, மோசமான தகவல்கள் பரப்பப்பட்டு வருவது தங்களுக்கு வேதனை அளிப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.முன்னதாக, நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பணியில் இருந்து விலகிய ஆசிரியை சபரிமாலா, சிறுமியின் குடும்பத்தினருக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார். இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறையை தடுக்க சட்டங்களை கடுமையாக்கினால் மட்டும் போதாது, உரியநடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். மேலும், பள்ளிகளில் பாலியல் கல்வியை கட்டாயமாக்குவதோடு ஆண் குழந்தைகளின் பெற்றோர்கள் இது போன்ற விவகாரத்தின் போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலாக இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும் பலரிடம் பெற்ற உதவிகளின் அடிப்படையில் தற்போது சிறுமியின் குடும்பத்தினருக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வீடு, சிறுமியின் தங்கைக்கு உரிய கல்வி உள்ளிட்டவற்றை வழங்கவும் தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.