வழக்கறிஞர்கள் நீதிமன்றம் புறக்கணிப்பு
ஈரோடு, ஏப். 26-ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளியன்று வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.பிறப்பு, இறப்பு மற்றும் சாதி சான்றிதழ்கள் வருவாய்த்துறை வழங்குவதற்கு பதிலாக ஏற்கனவே இருந்த நடைமுறையின்படி மீண்டும் நீதிமன்றம் மூலம் வழங்க வேண்டும். மோட்டார் வாகன விபத்துவழக்குகள் முறையாக நடைபெற மத்திய, மாநிலஅரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கறிஞர்கள் தாக்கல் செய்யும் வக்காலத்து மற்றும் மெமோ குறிப்பில் வழக்கறிஞர் சான்றொப்பம் இடத்தில் புகைப்படம் ஒட்டும் நடைமுறையினை கைவிடவேண்டும். நீதிமன்ற கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும். லோக் அதாலத் முறையில் மாற்றம் வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுவை வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டு குழு சார்பில் 2 நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பவானி, கோபி, சத்தி, பெருந்துறை, கொடுமுடி உள்ளிட்ட பகுதிகளில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 2,500 வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.
விளையாட்டு அரங்கில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரிக்கை
தருமபுரி, ஏப்.26-அரூர் விளையாட்டு அரங்கில் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தருமபுரி மாவட்டம், அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு அரங்கில் ஓட்டம், கைப்பந்து, கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகள் விளையாடும் வகையில் மைதான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த விளையாட்டு அரங்கில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள், பள்ளிச் சிறுவர்கள் விளையாடுகின்றனர்.அதேபோல், காலை மற்றும் மாலை நேரங்களில் பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர். ஆனால், இந்த விளையாட்டு மைதானத்தில் குடிநீர், கழிப்பிடம், மின் விளக்குகள் உள்ளிட்ட வசதிகள் இல்லை. இதனால், நாளுக்கு நாள் விளையாட்டு மைதானத்துக்கு வருவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனவே, அரூரில் உள்ள சிறு விளையாட்டு அரங்கு வளாகத்தில் மக்களுக்குத் தேவையான குடிநீர், மின் விளக்குகள், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.