திருப்பூர், ஏப். 17 -திருப்பூரில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.இப்பணியினை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கே.எஸ்.பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.திருப்பூர் நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்குப் பதிவிற்கு தேவையான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவிற்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் வி.வி.பேட் ஆகிய இயந்திரங்கள் தேர்தல் ஆணையத்தின் மூலம் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. இந்த இயந்திரங்கள் வாக்குப்பதிவிற்காக வாக்குச்சாவடி மையங்களுக்கு எடுத்துச் செல்வதற்காக ஒரு மண்டலத்திற்கு ஒரு வாகனம் என 148 மண்டலத்திற்கு 148 வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த வாகனத்தில் ஒரு மண்டல அலுவலர் மண்டல உதவி அலுவலர் மற்றும் ஒரு மண்டல அலுவலக உதவியாளர் என 3 நபர்களும் பாதுகாப்பிற்காக காவலர்களுடன் வாகனம் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த வாகனத்தில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 667 வாக்குச்சாவடி மையங்களில் 1704 வாக்குச்சாவடிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம், வி.வி.பேட் மற்றும் எழுது பொருட்கள் படிவங்கள் மற்றும் சாக்கு பைகள் உள்ளிட்ட பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.மேலும் இந்த வாகனங்களை கண்காணிக்கும் வகையில் பாதுகாப்பு வைப்பறையிலிருந்து இயந்திரங்களை கொண்டு செல்லும் 148 வாகனங்களில் ஜி.பி.எஸ்.கருவி பொருத்தப்பட்டுள்ளது. இக்கருவி மாவட்ட ஆட்சியரகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறையின் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்தார். திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் பொருட்கள் வாக்குச்சாவடி மையத்திற்கு அனுப்பி வைக்கும் பணியும் நடைபெற்றது.