மதுரை:
இந்தியாவிற்குள் வருவதற்கான விசா பெற முழு உடல் பரிசோதனை சான்றிதழ் வழங்குவதை கட்டாயமாக்க உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை முடித்து வைத்தது. மதுரையை சேர்ந்த கே.கே. ரமேஷ் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில்,”தற்போது உலகம் முழுவதையும் கொரோனா நோய்த்தொற்று அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா நோய் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.
கொரோனா நோய்த் தொற்று இந்தியாவில் பரவ முக்கியக் காரணம் வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்தவர்களை முறையாக பரிசோதிக்காமல் அனுமதித்ததே ஆகும். இந்தியாவிற்கு வர விசா பெறுவதற்கும் முழு உடல் பரிசோதனை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்பதை கட்டாயம் ஆக்கினால் இனிவரும் காலங்களில் நோய் தொற்று பரவுவதை தடுக்க இயலும்.பிற நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மூலம், விசா பெற முழு உடல் பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என்பதை தெரிவிக்க உத்தரவிட வேண்டும். மேலும் பிற நாடுகளில் வாழும் இந்தியர்கள் விசா பெறுவதற்கு முழு உடல் பரிசோதனை செய்து அதற்கான சான்றை சமர்ப்பிக்க வேண்டும். இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் மருத்துவக் குழுவை அமைக்கவும்உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்பி.என்.பிரகாஷ்,புகழேந்தி அமர்வு, மத்திய அரசு தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனக் கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.