கொச்சி:
கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள இத்தாலியில் சிக்கியிருந்த 13 பேர் கேரளம் திரும்பினர். அவர்கள் அனைவரும் வீட்டுக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.இத்தாலியிலிருந்து இவர்கள் துபாய்வழியாக எமிரேட் விமானத்தில் கொச்சிநெடும்பாச்சேரி விமான நிலையம் வந்தடைந்தனர்.
இவர்களை சுகாதாரத்துறையினர் அவரவர் வீடுகளுக்கு அழைத்துச் சென்றனர். வீடுகளில் கண்காணிப்பில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். மிலானில் உள்ளவர்களை அழைத்துவர ஏர்இந்தியாவின் தனி விமானம் சனிக்கிழமையன்று மதியம் புறப்பட்டுச் சென்றது. மிலான் விமான நிலையத்தில் காத்திருக்கும் 250 பேரையும் அழைத்து வர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மாணவர்களாவர். கண்ணூரில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நபருடன் துபாய் குடியிருப்பில் தங்கியிருந்த ஏழு பேரும் கேரளா அழைத்துவரப்பட்டனர். வெள்ளியன்று நள்ளிரவில் கருப்பூர் விமான நிலையம் வந்து சேர்ந்தஇவர்கள் கண்ணூர் மாவட்ட மருத்துவமனையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். கொரோனா பாதிப்புள்ளவருடன் தங்கியிருந்த மற்ற 5 நபர்கள் ஏற்கனவே கண்ணூருக்கு திரும்பி வந்தனர். கொரோனா நோயாளியுடன் பழகிய 15 பேரும் இப்போது கண்காணிப்பில் உள்ளனர். இவருடன் தொடர்புடைய நபர்களின் இரண்டாம் கட்ட பட்டியல்தயாரிக்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
சனிக்கிழமையன்று அமைச்சர் இ.பி.ஜெயராஜன் தலைமையில் கண்ணூரில் நடக்கும் கூட்டத்தில் தொடர் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க உள்ளனர்.கண்ணூரில் இதுவரை 30 மருத்துவமனைகளிலும் 200 பேர் வீடுகளிலும் கண்காணிப்பில் உள்ளனர். பரியாரத்தில் மேலும் இரண்டு தனிமை வார்டுகள் திறக்கப்பட்டுள்ளன.