tamilnadu

விதி மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

கோவை, மே 4-மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக விதி மீறும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக கு.இராசாமணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, 10ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி முடிவுகள் வெளியிடப்பட்டள்ளது. இதனைத் தொடர்ந்து கோவை மாவட்டத்தில் அரசு, நகராட்சி, மாநகராட்சி, அரசு நிதி உதவி பெறும், சுயநிதி மற்றும் மெட்ரிகுலேசன் மேல் நிலைப்பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு சேர்க்கை நடைபெற்று வருகிறது. 10ம் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் 11ம் வகுப்பில் சேர்க்கை அளிக்கப்பட வேண்டும். 2019-20 கல்வியாண்டிற்கான சேர்க்கை நடைபெறும் போது நடைமுறையிலுள்ள இட ஒதுக்கீட்டின்படி பாடவாரியாக சேர்க்கை நடைபெற வேண்டும். குறிப்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர் சேர்க்கையின் போது ஒவ்வொரு பாடப்பிரிவிலும் நடைமுறையிலுள்ள இடஒதுக்கீட்டினை கண்டிப்பாக பின்பற்றி சேர்க்கை அளிக்க வேண்டும். இது தொடர்பாக ஏதேனும் புகார்கள் வரப்பெற்றால் அல்லது மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டால் விதி மீறும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.