tamilnadu

img

சேவூர் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

அவிநாசி, மே 29-சேவூர் பகுதியில் கடைகள், ஓட்டல்கள் ஆகியவற்றில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தியவர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அபராதம் விதித்தனர். தமிழக அரசு கடந்த ஜனவரி 1ந் தேதி முதல் ஒரு முறை பயன் படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்துள்ளது. இந்நிலையில் சேவூர் ஊராட்சி சுற்றுவட்டார பகுதியில் உள்ள கடைகளில் வட்டார வளர்ச்சிஅலுவலர்கள்புதனன்று திடீர்சோதனை மேற்கொண்டனர். இச்சோதனை சேவூர் அருகே உள்ள தண்டுக்காரன்பாளையம், மங்கரசு வலையபாளையம் ஆகிய ஊராட்சிகளில் அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி லட்சுமி தலைமையில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் 20 பேர் கொண்ட குழுவினர் மேற்கொண்டனர். இதில் காமராஜபுரம், பேரநாயக்கன்புதூர், லூர்துபுரம், ராமியம்பாளையம், தாளக்கரை ஆகிய பகுதிகளில் உள்ள மளிகைக்கடைகள், ஓட்டல்கள், பேக்கரிகள், தள்ளுவண்டி கடைகள், இறைச்சிக்கடைகள் உள்ளிட்ட 38 கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குவளைகள், பாலிதீன் கவர், தட்டுகள் உள்பட 84 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதமாக ரூ.14 ஆயிரத்து 100 வசூலிக்கப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை கடைகளில் பயன்படுத்தினாலோ, விற்பனை செய்தாலோ ரூ.50 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், தமிழக அரசு அறிவித்துள்ள பிளாஸ்டிக் ஒழிப்பை வரவேற்கிறோம். ஆனால் வெளிநாட்டில் இருந்து உற்பத்திச் செய்யப்படும் உணவு,  தின்பண்டங்கள் பிளாஸ்டிக் கவர்களில் தான் அடைத்து விற்பனை செய்யப்படுகின்றன. இதை தடை செய்ய தமிழக அரசு தயக்கம் காட்டுகிறது. இதனால்  தள்ளுவண்டி மற்றும் சாலையோர வியாபாரிகள் மத்தியில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் அவர்கள் மீது கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது என  வியாபாரிகள் தெரிவித்தனர்.