tamilnadu

img

கோவை வாக்கு எண்ணிக்கை மைய பாதுகாப்பில் அலட்சியம்

கோவை, ஏப். 23–கோவை வாக்கு பதிவு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக அங்கு அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் காட்சி பதிவு பல மணி நேரமாக தடைபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆறு மணிநேர போராட்டத்திற்கு பிறகு காட்சி பதிவுகள் தெரிந்தது. கோவை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கோவை வடக்கு, தெற்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், சூலூர் மற்றும் பல்லடம் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோவை தடாகம் சாலையில் உள்ள அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் 3 அடுக்குபாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் வாக்க பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையை கண்காணிக்க மொத்தம் 112 கண்காணிப்பு கேமராக்களும் பொறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 24 மணி நேரம் வாக்கு எண்ணும் மையம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அரசியல் கட்சி முகவர்களும் சுழற்சி முறையில் கண்காணித்து வருகின்றனர்.


6 மணி காட்சிகள் மறைப்பு


இந்நிலையில் செவ்வாயன்றுகாலை 9.30 மணியளவில் பெரும்பாலான கேமராக்கள் இயங்கவில்லை என அரசியல்முகவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் ராசாமணி வாக்கு பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள மையத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதில் கண்காணிப்பு கேமராக்கள் இயங்குகிறது என்றாலும் வேட்பாளர்களின் முகவர்கள் சென்று பார்க்கும் அறையில் உள்ள திரையில் கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காட்சிகள் மட்டும் தெரிந்தன. மற்ற ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள காட்சி பதிவுகள் தெரியவில்லை. இதனையடுத்து தொழில் நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு, கேமராக்களை சரி செய்யும் பணிகள் நடைபெற்றன. சுமார் ஆறு மணிநேரத்திற்கும் மேலாக இதனை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் மேற்கொண்டனர். இப்பணி மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி மேற்பார்வையில் நடைபெற்றது. கோவை மாநகரகாவல் ஆணையாளர் சுமித்சரண்,கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன், சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல், மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் திரையில் காட்சிப் படுத்தப்பட்டன.


அரசியல் கட்சியினர்


இது குறித்து அரசியல் கட்சியினர், வாக்கு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணியில் தகுதி மற்றும் தொழில் நுட்ப அறிவுள்ள நிறுவனத்தை தேர்வு செய்யாமல் ஆளும் கட்சியினரின் சிபாரிசு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டதால் இதுபோன்ற குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.  


மாவட்ட ஆட்சியர்


இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர்ராசாமணி, வாக்கு எண்ணிக்கை மையத்தில் 100 சதவிகிதபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. திங்களன்று இரவுபெய்த பலத்த மழையின் காரணமாக தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் 112 சி.சி.டிவி கேமராக்களில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் தெரியாமல் இருந்தது. சிசிடிவி கேமராக்களில் அனைத்து காட்சிகளும் பதிவாகியுள்ளது. திரையில் மட்டும் தெரியவில்லை. சிசிடிவி கேமராக்களை பொறுத்திய ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் அனைத்துகேபிள், கேமரா ஒயர்கள் முழுமையாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார். 


சூலூர்


மேலும், சூலூர் சட்ட பேரவை இடைத்தேர்தலுக்கு அதிகளவில் பறக்கும் படைகள் நியமிக்கப்பட்டுள்ளன. சூலூர் இடைத்தேர்தலையொட்டி கோவை மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. சூலூர் தொகுதி இடைத்தேர்தலில் தற்போது வரை 3 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இடைத்தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெற நடவடிக்கை எடுத்துவருவதாக ஆட்சியர் ராசமாணிதெரிவித்தார்.