அச்சுத்துறையில் நவீன தொழில்நுட்பங்களை உட்கொண்டு காலத்துக்கேற்ற மாற்றத்துடன் நாடுமுழுவதும் 17 இடங்களில் இந்தியஅரசு அச்சகங்கள் செயல்பட்டு வருகின்றன. கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் 132.7ஏக்கர் நிலப்பரப்பில் செயல்பட்டு வரும் அச்சகத்தை மூடிவிட மோடி அரசு முடிவு செய்து அதற்கான உத்தரவுவையும் பிறப்பித்துள்ளது. 2017 டிசம்பர் 29இல் பிறப்பிக்கப்பட்ட அந்தஉத்தரவின்படி 2018 ஜனவரி 16ஆம் தேதிக்குள் மராட்டிய மாநிலம் நாசிக்கில்உள்ள அரசு அச்சகத்தில் பணியில்சேர வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இயந்திரங்கள் அனைத்தையும் நாசிக்குக்கு மாற்றவும் உத்தரவானது. இது தொழிலாளர்களை நிலைகுலைய வைத்தது. இங்குள்ள ஊழியர் சங்கத்தின்தலைவராகவும் செயல்பட்டு அண்மையில் ஓய்வு பெற்ற பி.லோகநாதன் கூறுகையில், பிறஸ்ஸ மூடப்பபோறாங்கன்னு சொன்னதுமே அதிர்ச்சியில தங்கய்யா, ஜெயக்குமார், பரமசிவம்-னு 3 தொழிலாளிங்க உசிர விட்டுட்டாங்க. சிறுநீரக பாதிப்பினால மூத்திர பைய கையில பிடிச்சு சிறுநீர வெளியேற்ற வேண்டிய இக்கட்டுல நான் இருந்தேன். அதே கோலத்துல டிவிக்கு பேட்டி குடுத்தேன். பிள்ளைகளோட படிப்பு என்னாகும், அவங்க கல்யாணம் எப்படி நடக்கும், குடும்பம் சிதறுமேன்னு பரிதவிச்சோம். தோழர் பி.ஆர்.நடராஜனும் சிபிஎம் காரங்களும் வந்து எங்களுக்கு தைரியம் குடுத்தாங்க. சென்னைக்கு அழைச்சிட்டுபோய் மூத்த வழக்கறிஞர் வைகை மூலமா உயர்நீதிமன்றத்துல வழக்கு போட்டு பிறஸ்ஸ மூடாம இப்போதைக்கு தடுத்திருக்கோம். இந்த பிறஸ் இங்கேயே இருக்கணும்னா, பிஆர்என் ஜெயிச்சு டில்லிக்கு போயாகணும். நாங்க ஓய்வுபெற்று நிம்மதியா இருக்கணும்னா, எங்களுக்கு இத்தனநாள் சோறுபோட்ட பிறஸ்சும் பாதுகாக்கப்படணும் என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக பி.ஆர்.நடராஜன் அறிவிக்கப்பட்டதும் கோவை அரசு அச்சக தொழிலாளர்கள் கட்சி அலுவலகத்துக்கு சென்று சால்வை அணிவித்தும், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான தொகையையும் அளித்து வாழ்த்து தெரிவித்தனர். தொழிலாளர்களின் அன்புக்கு உரியவராக பி.ஆர்.நடராஜன் மாறியது குறித்து கேட்டபோது, நாங்க இதுவரைக்கும் போராட்டம் நடத்தினதே இல்லீங்க. யூனியனே நிர்வாகத்துகூட பேசி பிரச்சனையை தீர்த்து வச்சுடும். பிறஸ் மூடப்போற உத்தரவு கைல கிடைச்ச பிறகும் நாங்க நேரடி போராட்டத்தில இறங்கல. பி.ஆர்.நடராஜனும், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும்தான் அனைத்துக்கட்சி போராட்டக்குழு அமைச்சு எங்களுக்காக முற்றுகைப் போராட்டம் நடத்தி 2018 ஜனவரி 6ஆம் தேதி கைதானாங்க. மண்டபத்திலேயே பேசி 9ஆம் தேதிகடையடைப்புன்னு முடிவு செஞ்சாங்க. விடுதலயான உடனே மண்டபத்திலேர்ந்து 5 கிலோமீட்டர் நடந்து கடையடைப்புக்கு ஆதரவு கேட்டாங்க. நீதிமன்றமும் இந்த உணர்வ மதிச்சு மூடல்உத்தரவை தடை செய்திருக்கு. மோடியின் சர்வாதிகாரத்துக்கு மக்கள்தான் நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கணும், என்றார்.
சிக்கன நடவடிக்கையாக 17 அச்சகத்தை 5 ஆக சுருக்க 2017இல் இந்திய அரசின் அச்சக இயக்குனரகம் முடிவு செய்தது. அதற்கும் சில மாதங்களுக்கு முன்புதான் கோவை அச்சகத்தில் 454 பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு பணி நியமனத்துக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்த நியமனங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என பி.ஆர்.நடராஜன் மத்திய அரசுக்ககோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், அச்சகத்துக்கு சொந்தமான பெரும் விலை மதிப்புள்ள நிலத்தை தனியாரிடம் விற்பனை செய்யும் நோக்கத்துடன் மோடி அரசு முதல்கட்டமாக அச்சகத்தை மூடும் முடிவுக்கு வந்துள்ளது. இதுபோல் கேரள மாநிலம் கொரட்டி, கர்நாடக மாநிலம் மைசூர் ஆகிய இடங்களில் உள்ள அச்சகங்களையும் மூட உத்தரவாகியுள்ளது. இவை மூன்றும் நாசிக் அச்சகத்துடன் இணைப்பதன் மூலம் தென்னிந்தியாவில் இந்திய அச்சகம் இல்லை என்கிற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இது தென் மாநிலங்களை புறக்கணிக்கும் மத்திய அரசின் நடவடிக்கை என்கிற தொழிற்சங்க தரப்பு குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க முடியாமல் மத்திய அரசும், இந்திய அச்சக இயக்குநரகமும் விழிபிதுங்கி நிற்கிறத. பொதுத்துறைகளை பாதுகாப்பது என்கிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை அடிப்படையிலான முயற்சி 12 இந்தியஅரசு அச்சகங்களுக்கு ஆக்சிஜன் வழங்கிக்கொண்டிருக்கிறது. இந்திய பொதுத்துறைக்கு உயிரூட்ட விரும்பும் நாட்டு மக்கள் மோடி அரசு வீழ்வதையே விரும்புவார்கள். அவ்வாறே கோவையில் பி.ஆர்.நடராஜனின் வெற்றியை அவர்கள் உறுதி செய்துகொண்டிருக்கிறார்கள்.
கண்டுகொள்ளாத பாஜக
கோவையில் உள்ள இந்திய அரசு அச்சகம் மூடல் உத்தரவுக்கு எதிராக கடையடைப்பு உள்ளிட்ட பலகட்ட நேரடி போராட்டங்கள் அரசியல் கட்சிகள், பொதுமக்கள் ஆதரவுடன் நடந்துள்ளன. தற்போது சிபிஎம் உதவியால் நீதிமன்றத்தில் சட்டப்போராட்டமும் நடைபெறுகிறது. 2006ஆம் ஆண்டு இத்தகைய ஒரு முயற்சி நடந்தது. அப்போது பி.ஆர்.நடராஜன் தொழிற்சங்க தலைவர்களை தில்லிக்கு அழைத்துச் சென்று அமைச்சர் கமல்நாத்தை சந்தித்து அச்சக இணை்பு முயற்சியை கைவிடச் செய்துள்ளார். அன்று எதிர்கட்சியாக இருந்தபோதும்கூட பாஜக இதை கண்டுகொள்ளவில்லை. இப்போதும் கண்டுகொள்ளாமல் இருக்கும் ஒரே கட்சி பாரதிய ஜனதா. கோவை மக்களவை தொகுதி வாக்காளர்களுக்கு இது நன்றாகவே தெரியும் என்கிறார்கள் பரிதவிக்கும் தொழிலாளர்கள்.
சி.முருகேசன்