கோவை, மே 9-கோவில் திருவிழாவில் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட மக்கள் வலியுறுத்தினர். கோவை மதுக்கரையடுத்த குமிட்டிபதி கிராமத்தில் மாரியம்மன் கோவிலில் புதனன்று சித்திரை திருவிழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தலித் மக்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றுள்ளனர். அப்போது ஜமாப் மேளம் அடித்து சென்ற தலித் இளைஞர்களை தடுத்து ஜமாப் அடித்து ஆடக்கூடாது என அங்குள்ள ஆதிக்கசாதி இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தலித் இளைஞர்கள் மற்றும் பெண்கள் மீது மற்றொரு தரப்பினர், சாதிப்பெயரை சொல்லி இழிவுபடுத்தி தடி மற்றும் கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த 6 பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் தலித் மக்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், அம்மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோரியும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அப்பகுதியைச் சேர்ந்தோர் ஆர்ப்பாட்டம் நடத்தி ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.