பொள்ளாச்சி, மே 26-பொள்ளாச்சி அடுத்த நவமலை வனப்பகுதியில் சனியன்று இரவு காட்டு யானை தாக்கியதில் முதியவர் மாகாளி (52) பரிதாபமாக உயிரிழந்தார்.கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அருகே உள்ள நவமலை வனப்பகுதியில் வெள்ளியன்று இரவு ரஞ்சனா (7) என்ற சிறுமியை காட்டு யானைதாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சோகம் மறைவதற்குள், சனியன்று இரவு ஏசம்மா (46) என்பவரது கணவர் மாகாளி(52) இரவு வீட்டிற்கு வெளியில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது உணவு தேடி அங்குவந்த காட்டு யானை வீட்டினை தாக்கி அரசி மூட்டைகளை சேதப்படுத்தி அவரை மிதித்துவிட்டுச்சென்றது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகஉயிரிழந்தார். இச்சம்பவம்தொடர்பாக ஆழியார் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து இறந்தவரின் உடலை மீட்க நவமலை பகுதிக்குவந்துள்ளனர். அப்பொழுது உரியபாதுகாப்பு வழங்காமல் இறந்தவரின் பிரேதத்தை கொடுக்க முடியாது என அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதனையடுத்து காவல் துறையினர் போராட்டக் காரர்களை மிரட்டி உடலை மீட்டுகோட்டூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்ததாக மலைவாழ் மக்கள் தெரிவித்தனர்.
மாவட்ட வன அலுவலர் முற்றுகை
கோவை மாவட்ட வன அலுவலர் மாரிமுத்து இச்சம்பவம் அறிந்து நேரில் பார்வையிட வந்தார். அவரிடம் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகையில், அதிகாரத் தொனியில் பேசிய வன அலுவலரை மலைவாழ் மக்கள் சிறை பிடித்தனர். பின்னர்வேறு வழியின்றி செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட வனஅலுவலர் மாரிமுத்து கூறுகையில், இரண்டு உயிரிழப்புகளை ஏற்படுத்திய காட்டு யானையினை பிடிக்க முகாம்களிலிருந்து பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட 2கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு காட்டு யானையினை விரட்ட நடவடிக்கை எடுக்கக்படும் என தெரிவித்தார்.