கோவை, மே 30-தொழிலாளர்களின் கோரிக்கையின் மீதான நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் அவமதிக்கும் பிரிக்கால் நிர்வாகத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்து தொழிற் சங்கம் சார்பில் கோவையில் வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை பெரியநாயக்கன்பாளையம் பிரிக்கால் நிறுவனத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுமார் 600க்கும் மேற்பட்ட நிரந்தரத் தொழிலாளர்கள் 100 நாட்களுக்கும் மேலாகவேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பிரிக்கால் நிர்வாகம் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் 302 பேரை உத்தரகாண்ட், மகாராஷ்டிரம், ஆந்திரம் போன்ற மாநிலங்களுக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து ஏஐசிசிடியு சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவுப்படி தமிழக அரசின் தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை கடந்த மே 3 ஆம் தேதியிட்டு, தொழிற் தகராறுகள் சட்டம் 1947ன் 10 (1) பிரிவின் கீழ் அரசாணை 221, 10 பி பிரிவின் கீழ் அரசாணை 222 ஆகியவற்றை பிறப்பித்துள்ளது. அதில் வழக்கின் விசாரணை முடியும் வரை, பிரிக்கால் நிறுவனம் பிறப்பித்த பணியிட மாறுதல் உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் அரசு ஆணையிட்டது. இந்நிலையில் அரசாணையை அவமதிக்கும் வகையில், நீதிமன்ற உத்தரவை அமலாக்காதபிரிக்கால் நிர்வாகத்தைக் கண்டித்தும், உடனடியாக தமிழக அரசு தலையிட்டு பிரிக்கால் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோவையில் ஏஐசிசிடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஏஐசிசிடியு சங்கத்தின் செயலாளர் ஜெயபிரகாஷ் நாராயணன் தலைமை தாங்கினார். இதில் ஏஐசிசிடியு அகில இந்திய செயலாளர் எஸ்.குமாரசாமி, திமுக மாவட்ட செயலாளர் சி.ஆர்.ராமச்சந்திரன், சிஐடியு மாவட்ட தலைவர் சி.பத்மநாபன், செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஏஐசிசிடியு நடராஜன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். இதில் ஏராளமான பிரிக்கால் தொழிலாளர்கள் மற்றும் அனைத்து தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்று பிரிக்கால் நிர்வாகத்தின் அடாவடித்தனத்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.