tamilnadu

img

காவல்துறை மிரட்டலால் பாதிக்கப்பட்டவர் குடும்பத்தோடு தீக்குளிக்க முயற்சி

கோவை, ஏப். 29-கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனைவி மற்றும் இரண்டுபெண் பிள்ளைகளுடன் வந்த ஒருவர்திடீரென பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கோவை சேரன்மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர்தனது மனைவி சாந்தி, 16 மற்றும் 18 வயதுடைய இருபெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர்சோப்பு, பினாயில் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை வாங்கி விற்பனை செய்து வருகிறார். மேலும்தனது வீட்டிலேயே ஆடு மற்றும்நாய் வளர்ப்பில் ஈடுபட்டு வரும் அவர் அவற்றை விற்று வந்துள்ளார். இந்த நிலையில் அவரது வீட்டின் அருகே புதிதாக வீடு கட்டிய காவல்துறை அதிகாரி ஒருவர் ஆடு மற்றும் நாய் வளர்ப்பினால் தங்களுக்கு சிரமம் ஏற்படுவதாக கூறி செல்வராஜை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அச்சம் அடைந்த செல்வராஜ் காவல்துறையில் புகார் அளித்தால் தனக்கு நீதி கிடைக்காது என்று எண்ணி திங்களன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது குடும்பத்துடன் வந்தார். அப்போது திடீரென தான் கொண்டு வந்திருந்த பையில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தனது குழந்தைகள், மனைவி மற்றும் தன்மீதும் ஊற்றி திடீரென தீ வைத்து தற்கொலை செய்து கொள்ள முற்பட்டார். இதனை சற்றும் எதிர்பாராத ஆட்சியரகத்தில் நின்றிருந்த பத்திரிகையாளர்கள் மற்றும் ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் உள்ளிட்டோர் அவர் கையிலிருந்த தீப்பெட்டி மற்றும் பெட்ரோலை பிடுங்கி, அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி அவர்களை காப்பாற்றினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. தகவலறிந்து அங்கு வந்த பந்தய சாலை காவல் நிலையத்தார் 4 பேரையும் மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது வீட்டின் அருகே புதிதாக வீடு கட்டி வந்த காவல்துறை அதிகாரி செல்வராஜை தொடர்ந்து மிரட்டி வருவதாகவும், காவல்துறை அதிகாரி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தால் காவல் துறையினர் தன் மீது தான் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற அச்சத்தின் பேரிலேயே அவர்தற்கொலை செய்ய முடிவு செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து பந்தய சாலை காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.