tamilnadu

img

கோவை எஸ். பி. பாண்டியராஜனை கைது செய்ய வேண்டும் மனித உரிமை வழக்கறிஞர்கள் வலியுறுத்தல்

கோவை எஸ். பி. பாண்டியராஜனை கைது செய்வதுடன், அவர் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமை வழக்கறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர். மனித உரிமை வழக்கறிஞர்களின் சார்பில் கோவையில் சனிக்கிழமை (மார்ச் 30) பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பொ. ரத்தினம்,வழக்கறிஞர்கள் மு.ஆனந்தன், ச.பாலமுருகன் , இளங்கோ, தந்தை பெரியார் திராவிடர் கழகதலைவர் கு. ராமகிருஷ்ணன்ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பில் அவர்கள் கூறுகையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் சட்டத்தை மீறி பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜன் வெளியிட்டது சட்டப்படி குற்றம். ஆகவே, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகும் அவர் அதே பதவியில் இன்னும் நீடிக்கிறார். இந்த நிலையில் துடியலூரில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட அதிர்ச்சிகரமான கொடூரம் நிகழ்ந்துள்ளது. அதே பாண்டியராஜன் எஸ்.பி.யாக உள்ள போது அவர்கீழுள்ள துடியலூர் காவல்துறை எப்படி முறையாக வழக்கை விசாரிக்கும். மேலும், குற்றவாளிகள் குறித்து தகவல் அளித்தால் பரிசு என்று காவல்துறை அறிவித்துள்ளது. இந்த எஸ். பி. யை நம்பி யார் தகவல் அளிப்பார்கள். 5 நாட்களாகியும் இன்னும் குற்றவாளிகளை கைது செய்யவில்லை. ஆகவே, எஸ்.பி பாண்டியராஜன் இனியும் நீடிக்க அனுமதிக்கக் கூடாது அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவர் மீது தமிழக அரசும், காவல்துறையும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.