உத்தரப்பிரதேசத்தில் ஏற்கனவே கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 13 வயது சிறுமியை மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் விசாரணை குழு அமைக்க தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் முடிவு செய்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் லலித்பூர் மாவட்டத்தில் 13 வயது சிறுமியை 4 பேர் கடத்தி, ஏப்ரல் 22 அன்று போபாலுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அந்தச் சிறுமியை மூன்று நாட்கள் வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பாலியல் வன்கொடுமை செய்தவர்களிடமிருந்து தப்பித்து வந்த சிறுமி, காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க சென்றபோது காவல் நிலைய அதிகாரியால் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து 4 பேர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த சிறுமி குற்றம் சாட்டிய நிலையில், அதைத் தொடர்ந்து உறவினர் ஒருவருடன் புகார் அளிக்க காவல் நிலையத்திற்குச் சென்றார். அப்போது அங்கு பணியிலிருந்த ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி திலக்தாரி சரோஜ் என்பவர் சிறுமியை தனி அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த சிறுமி புகார் அளித்துள்ளார்.
இதனைதொடர்ந்து காவல் அதிகாரி திலக்தாரி சரோஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதோடு அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட காவல் நிலைய அதிகாரி தப்பி ஓடியதால், அவரை தேடி வந்தனர். இதன்பின்னர் அவரது நெருக்கமான நண்பர்களிடம் விசாரணை செய்தபின் பிரயாக்ராஜ் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு போலீசார் இன்று கைது செய்தனர். முன்னதாக சிறுமியை கடத்தியதாக மேலும் 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக டிஐஜி தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு 24 மணிநேரத்தில் அறிக்கை அளிக்கப்படும் என்றும், அறிக்கையின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் உ.பி. காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இந்த வழக்கில் விசாரணை குழு அமைக்க தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் முடிவு செய்துள்ளது.