கொச்சி:
கேரளத்தில் கொரோனா வலுவாக தாக்கினாலும் தட்டுப்பாடு வராத அளவுக்கு 110.5 டன் ஆக்சிஜன் கையிருப்பு உள்ளது. எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் உள்ளதாக பெட்ரோலியம் அண்ட் எக்ஸ்புளோசிவ் சேப்டி ஆர்கனைசேசன் (பெசோ) உறுதி அளித்துள்ளது. உலகின் பல பகுதிகளில் ஆக்ஸிஜன் கிடைக்காமல் உயிரிழப்பு ஏற்படும் நிலையில் ஆக்சிஜன் வழங்கலிலும் கேரளம் முதலிடத்தில் உள்ளது.
கேரளத்தில் 18 மருத்துவமனைகளில் ஆக்ஸிஜனை பாதுகாக்கும் பெரிய டாங்கர்கள் உள்ளன. 5,940 லிட்டர், 6,100 லிட்டர், 10,430 லிட்டர், 12,641 லிட்டர் என பல்வேறு அளவுகளில் சேமிப்புத் திறன் கொண்டவை இவை. எர்ணாகுளம் மாவட்டத்தில் கோலஞ்சேரி மருத்துவக் கல்லூரி, அமிர்தா, ஆஸ்ட்டர், லிசி போன்ற இடங்களில் இந்த டாங்கர்கள் உள்ளன. திருவனந்தபுரம், கோட்டயம், திரிச்சூர், மலப்புறம், கோழிக்கோடு ஆகிய இடங்களில் தலா 2 மருத்துவமனைகளில் டாங்கர்கள் உள்ளன. பத்தனம்திட்டா, கொல்லம், வயநாடு, ஆலப்புழாவில் தலா ஒரு இடத்தில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளுக்கு ஆக்ஸிஜன் கொண்டு செல்ல வசதியாக பாலக்காடு, எர்ணாகுளம் ஆகிய இடங்களில் பெரிய அளவிலான 2 ஆக்ஸிஜன் ஆலைகள் உள்ளன. தினமும் இருநூறு, ஐம்பது டன்கள் உற்பத்தி திறன் கொண்டவை இவை. இதோடு பல்வேறு மருத்துவமனைகளில் ஐந்தரை அடி உயரம் கொண்ட 3,814 பல்க் சிலிண்டர்கள் உள்ளன. இவற்றுக்கான ஆக்ஸிஜன் நிரப்பும் 19 பிளாண்டுகள் உள்ளன. வியாழனன்று கேரளத்தில் 2,212 சிலிண்டர்கள் தயாரிக்கப்பட்டு 2,086 மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.
வியாழனன்று உள்ள கணக்குகள் அடிப்படையில் மாநிலத்தில் 110.5 டன் ஆக்ஸிஜன் இருப்பில் உள்ளது. அவசர தேவைக்கு பக்கத்து மாநிலங்களுக்கு கொடுத்து உதவும் அளவுக்கு ஆக்ஸிஜன் இருப்பு உள்ளதாக வெடிபொருட்கள் துணை கட்டுபாட்டு அதிகாரி டாக்டர். ஆர்.வேணுகோபால் தெரிவித்தார். பெசோவும் கொச்சி கப்பல்சாலையும் இணைந்து ஒரு சிலிண்டரை ஒரே நேரத்தில் 6 நபர்களுக்கு பயன்படுத்தும் ஏற்பாடு குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறினார்.
கொரோனா பரவி வரும் வளர்ந்த நாடுகளில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் கிடைக்காமல் கையறு நிலை ஏற்பட்டது. இத்தாலியில் 70 வயதுக்கு மேல் உள்ள நோயாளிகளை மரணத்தின் பிடிக்குள் விட்டுவிட்டு இளம் வயதினருக்கு வென்டிலேட்டர்களை மாற்றி பொருத்திய காட்சியை உலகம் பார்க்க நேர்ந்தது.