tamilnadu

img

மாணவர் இயக்கம் மலர்ந்தது - ப.முருகன்

மாநாட்டில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் நேருவும், முகமது அலி ஜின்னாவும் நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் மாணவர்களின் பங்கு அவசியம் என்றும் அவர்களுக்கு இத்தகைய ஒரு அமைப்பு தேவை என்றும் தங்களது உரைகளின் போது சம்மேளனத்தின் துவக்கத்தை அங்கீகரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகில் நடைபெற்ற எந்தவொரு பேரெழுச்சியிலும் மாணவர்களின் பங்கு இல்லாமல் அந்த எழுச்சி வெற்றிபெற்றது இல்லை. இந்தியாவிலும் சுதந்திரப் போராட்டத்தின்போது மாணவர்களின் பங்கேற்பும் பெருமளவில் அமைந்திருந்தது. ஆங்காங்கே நகரங்களில் அமைந்துள்ள கல்விநிலையங்களிலிருந்து சுதந்திரப் போராட்டத்திற்காக குரல்கொடுத்த மாணவர்களை அமைப்பாக அணிதிரட்டுவதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முயற்சி எடுத்தது. இந்தப் பின்னணியில் 1936ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ல்அகில இந்திய மாணவர் சம்மேளனம் லக்னோ நகரில் துவங்கப்பட்டது. அதன் முதல் மாநாட்டில் ஜவஹர்லால் நேருவும், முகமது அலி ஜின்னாவும் கலந்து கொண்டது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில் அந்தக் காலத்தில் இருவரும் ஒரே மேடையில் பங்கேற்பது அரிதான நிகழ்வாகும். அந்தத் தலைவர்களை மாணவர் சம்மேளன மாநாட்டில் பங்கேற்கச் செய்வதற்கு முயற்சி செய்தவர்கள் ஹிரேன்தாஸ் குப்தா, ஹரி நாராயணன் அதிகாரி, பி.சி.ஜோஷி, ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோர்.

அந்த மாநாட்டிற்கு தலைமை தாங்கி துவக்கி வைத்துப் பேசிய நேரு சோசலிசத்தின் சிறப்பையும், இந்திய சுதந்திரப்போராட்டம் என்பது உலகம் முழுவதும் நடைபெறும் காலனி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதி என்பதை மாணவர்கள் உணர வேண்டும் என்பதும் விளக்கினார். பாலஸ்தீன மக்களை விடுதலைப் போராட்டம் ஸ்பெயின் நாட்டின் பாசிசத்திற்கு எதிராக நடத்தப்படும் போராட்டம் ஆகியவற்றை மாணவர்களின் கவனத்திற்கு நேரு கொண்டுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாநாட்டில் சம்மேளனத்தின் பொதுச் செயலாளராக காங்கிரஸ் மனோபாவம் கொண்ட பிரேம் நாராயணன் பார்கவா என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் கம்யூனிஸ்ட் தலைவர் ஜோலி பாட்டிவாலா என்பவர் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது சோசலிச மனோபாவம் கொண்ட மாணவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.  இந்த மாநாடு 25 தீர்மானங்களை நிறைவேற்றியது. மாநாட்டின் முதல் தீர்மானம் இந்த மாணவர் அமைப்பு உருவாக்க வேண்டியதன் அவசியத்தை விளக்கியது.

மாணவர்களுக்கான ஒரு நிரந்தர அகில இந்திய அமைப்பு பின் வரும் நோக்கங்களுக்காக உருவாக்கப்படுகிறது;

1. பல்வேறு மன்னராட்சி மாகாணங்கள் மற்றும் இந்திய மாகாணங்களில் உள்ள மாணவர்களிடையே சமத்துவமான முறையில் கலாச்சார மற்றும் அறிவுப்பூர்வ ஒத்துழைப்புக்கு உற்சாகமளிப்பது. 

2. நடப்பு கல்வி முறைகளின் மேம்படுத்துதலுக்கு ஆலோசனை தருவது.

3. மாணவர் சமுதாயத்தின் நலன்களைப் பாதுகாப்பது.

4. முழுமையான நாட்டு விடுதலைக்கான போராட்டத்தில் தங்களுடைய பங்கை மாணவர் சமுதாயம் ஆற்றும் வண்ணம் அவர்களுடைய சமூக, அரசியல் மற்றும் பொருளாதார உணர்வை தட்டி எழுப்புதல்.

இந்த மாநாட்டில் பொதுவான கல்விச்செலவை குறைக்க வேண்டும் என்பது முதன்மையான தீர்மானமாக அமைந்திருந்தது. இலவச, கட்டாய ஆரம்பக்கல்வி வேண்டும்;  தேசவிரோத, ஜனநாயக விரோத கருத்துக்களைக் கொண்டவையாக பாடப்புத்தகங்கள் இருக்கக்கூடாது; மாணவர்களுக்கு பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மற்றும் வெளியிலும் முழுபேச்சுரிமை ஸ்தாபனம் அமைக்கும் உரிமை ஆகியவை வேண்டும் ஆகிய இதர தீர்மானங்களாகும். 

இதுபோன்றே மாணவர்களின் நலனை வலியுறுத்துவதற்கான தீர்மானங்கள் பல்வேறு விசயங்கள் பற்றியதாக இருந்தது. இந்த மாநாட்டில் மாணவர்களின் நலன்களையும் கோரிக்கைகளையும் எடுத்துரைப்பதற்காக பத்திரிகை ஒன்றை துவக்குவது என்றும் அந்தப் பத்திரிகைக்கு ‘தி ஸ்டூடண்ட்ஸ் டிரிபியூன்’ என்று பெயர் வைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. அந்தப் பத்திரிகைக்கு ஆசிரியராக பிரபோத் சந்திர சின்கா நியமிக்கப்பட்டார். பின்னாளில் இந்தப் பத்திரிகை ‘தி ஸ்டூடண்ட்’ என பெயர் மாற்றப்பட்டது.

அந்தக் காலத்தில் நாட்டில் நடந்து கொண்டிருந்த சட்டமறுப்பு இயக்கம் திடீரென்று நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து உருவான நிலைமைகள், மாவீரன் பகத்சிங்கும் அவரது சக தோழர்களும் லாகூர் நீதிமன்றத்தில் வாதாடிய பொழுது முன்வைத்த புரட்சிகரக் கருத்துக்கள், திட்டமிட்டப் பொருளாதாரம் மூலம் சோவியத் நாட்டின் வளர்ச்சி போன்றவை இந்தியாவின் இளம் அறிவுஜீவிகளிடையேயும் மாணவர் சமுதாயத்தின் இடையேயும் ஒரு புதிய சிந்தனையை உருவாக்கியது. இதன் ஒட்டுமொத்த விளைவுதான் அகில இந்திய மாணவர் சம்மேளனத்தின் தோற்றம் என்றால் அது மிகையாகாது. இந்த மாநாட்டில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் நேருவும், முகமது அலி ஜின்னாவும் நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் மாணவர்களின் பங்கு அவசியம் என்றும் அவர்களுக்கு இத்தகைய ஒரு அமைப்பு தேவை என்றும் தங்களது உரைகளின் போது சம்மேளனத்தின் துவக்கத்தை அங்கீகரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாநாடு மாணவர்கள் தொடர்பான கல்விக் கட்டணத்தை குறைத்தல், தேர்வு முறையில் மாற்றங்கள், கல்வி முறையை ஜனநாயகப்படுத்துதல், பயிற்சி மொழிக் கொள்கை போன்ற தீர்மானங்களை நாட்டின் கவனத்திற்கு கொண்டு வந்தது. இதே ஆண்டில் லாகூர் நகரில் நவம்பர் 20-ஆம் நாள் அகில இந்திய மாணவர் சம்மேளனத்தின் இரண்டாவது மாநாடு நடைபெற்றது. இந்த சிறப்பு மாநாட்டுக்கு இடதுசாரி மனோபாவம் கொண்ட சரத் சந்திர போஸ் எனும் காங்கிரஸ் தலைவர் தலைமை வகித்தார்.

இந்த மாநாட்டில் 150க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர். அவர்களில் கணிசமானவர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாநாட்டில்தான் மாநாட்டுத் துவக்கநாளான நவம்பர் 20 அடுத்த ஆண்டு முதல் அகில இந்திய மாணவர் நாளாக கடைப்பிடிக்க வேண்டுமென்று அறிவிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் பிரேம் நாராயணன் பார்கவா மீண்டும் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த மாநாட்டில் தான் மாணவர்களுக்கான கோரிக்கை சாசனம் சம்மேளனத்தின் அமைப்புச் சட்டம் ஆகியவை உருவாக்கப்பட்டது. 1938ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சம்மேளனத்தின் மூன்றாவது மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் 11 மாகாணங்களிலிருந்து 200க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் அகில இந்திய மாணவர் சம்மேளனத்தின் மாநாடுகளில் மாணவப் பிரதிநிதிகளின் பங்கேற்பு அதிகரித்த வண்ணம் இருந்தது.