tamilnadu

img

பூஜ்ய சதவீத வரி கட்டாயம்: ஜிஎஸ்டி கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் வலியுறுத்தல்....

சென்னை:
43வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தில்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் காணொலி மூலமாக வெள்ளியன்று நடைபெற்றது.

சுமாா் 8 மாதங்களுக்குப் பிறகு நடைபெறும் இந்தக் கூட்டத்தில், தமிழகத்தின் சார்பில் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்மற்றும் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் கலந்து கொண்டுள்ளனர்.மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், அனைத்து மாநில நிதி அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

தமிழகத்தின் நிதி அமைச்சராக பொறுப்பேற் றுள்ள பழனிவேல் தியாகராஜன் முதல் முறையாக கலந்து கொண்டுள்ளார். இக்கூட்டத்தில் தமிழகத்தில், தமிழகத்திற்கான மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் மீதான வரியினை விலக்கு அளிப்பது தொடர்பான கோரிக்கைகள் முன்வைக்கப் பட்டுள்ளது.மேலும் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதன் முக்கிய அம்சங்கள் வெளியாகியுள்ளது. அதன் விபரம் வருமாறு:மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளின் தற்போதைய தலையாய பணி, கோவிட் பெருந்தொற்றினை எதிர்த்து நடவடிக்கை எடுப்பதேயாகும்.பெருந்தொற்றினை எதிர் கொண்டு, கட்டுப்படுத்துவதன் பொருட்டு அவசியமான பல்வேறு மருத்துவ பொருட்களை கொள்முதல் செய்யப் பட்டு வருவதை தாங்களும் அறிவீர்கள்.

அவைகளில், மாநில அரசு கொள்முதல் செய்கின்ற தடுப்பூசிகள் மற்றும்  ரெமிடெசிவிர், டொசிலிசுமப் அடங்கிய மருந்துகளை கொள்முதல் செய்வதே முக்கியமானவைகளாகும்.இச்சூழ்நிலையில் மாநில அரசு அல்லது அதன் முகவர்கள் மேற்கொள்ளும் கோவிட் பெருந்தொற்று தடுப்பூசிகள், ரெமிடிசிவிர் மற்றும் டொசிலிசுமப் ஆகியவை மீது பூஜ்ய வரி விகிதத்தினை தற்காலிகமாகவாவது விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இதன் மூலம் இத்தகைய அவசியமான பொருட் களின் மீதான விலை குறைவது மட்டுமின்றி, இதனை விற்பனை செய்பவர்களுக்கு பாதிப்பில்லாமல் உள்ளீட்டு வரி வரவு கிடைக்க வழி வகுக்கும்.இது குறித்து பிரதமருக்கு எங்கள் முதல்வர் ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளார் என்பதை நினைவு கூர்கிறேன்.எனவே, அத்தியாவசியமான இந்த பொருட்களுக்கு பூஜ்ய விகித வரி விதிக்க முடிவு எடுக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.இந்தக் கூட்டத்தின் நிகழ்ச்சிக் குறிப்புகளில் பூஜ்ய வரி விகிதம் தொடர்பாக எழும் சட்ட சிக்கல்கள் குறித்தும் சொல்லப்பட்டுள்ளது.ஒருமித்த கருத்து உருவாகும் பட்சத்தில், இந்த சட்டச் சிக்கல்களை உரிய சட்ட வரைவுகள் மூலம் தீர்க்கலாம் என்று நான் நம்புகிறேன்.இவ்வாறு பழனிவேல் தியாகராஜன் பேசியுள்ளார்.