சென்னை:
தமிழ்நாட்டில் பெட்ரோல் வரியில் ரூ.3 குறைக்கப்பட்டதால் தினசரி விற்பனை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.
திமுக அரசின் நிதிநிலை அறிக்கை
மீது நான்கு நாட்கள் நடைபெற்ற விவாதங்களுக்கு அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்து பேசினார். அப்போது, திமுக எதிர்க் கட்சியாக இருந்தாலும் ஆளும் கட்சியாக இருந்தாலும் ஒரே மாறா கொள்கைதான்”என்றார்.
“சமூகநீதி, பொருளாதார வளர்ச்சி, எல்லோருக்கும் கல்வி, இடஒதுக்கீடு, தேவைப்படுவோருக்கு அரசின் உதவி”இதுதான் 105 ஆண்டுகாலமாக செயல்படுத்தப்பட்டு வரும் ஒரு தத்துவம். இதைதான் எங்கள் முதலமைச்சர் மிக சுருக்கமாக கூறியிருக்கிறார்.“எல்லோருக்கும் எல்லாம்”. ஆனால், அதை அவரது அனுமதியுடன் சிறிது திருத்த விரும்புகிறேன். “எல்லோருக்கும் எல்லாம் என்பது சமூகப் பொருளாதார நீதிக்கு ஏற்ப”.
கடைசி பத்தாண்டுகளில் நடந்த ஆட்சி இந்த கொள்கையில் இருந்து விலகியது மிகவும் வருத்தம் அளிக்கிறது. அது என்னவென்றால், யாரெல்லாம், எதையெல்லாம் கைப்பற்ற முடியுமோ அதையெல்லாம் எடுத்துக்கொள்ளுங்கள் என்ற தத்துவத்தின் அடிப்படையில்தான் நடந்தது. இது எங்கள் கருத்துக்கு முற்றிலும் விரோதமானது. இதை மாற்றியே தீரவேண்டும். இதை மாற்றுவது மிகவும் சுலபமானதல்ல.ஆனால், எல்லா மனித இனத்துக்கும் சில அடையாளங்கள் பொதுவானவை. இதிலிருந்து விடுபட்டு வெளியில் வருவதற்கு நமக்கு தேவை பரந்தமனப்பான்மையும், திறந்த மனமும்தான். யாரிடமெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டுமோ அங்கெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒழுக்கம் தேவை. இதை “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்று கூறுகிறது புறநானூறு. இந்த அடிப்படையில்தான் மிக சிறந்த ஐந்து வல்லுநர்களை உள்ளடக்கி பொருளாதார நிபுணர் குழு முதலமைச்சருக்கு உருவாக்கப்பட்டிருக்கிறது என்றும் நிதியமைச்சர் கூறினார்.“முதலாளித்துவத்தை முதலாளிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டிய தேவையை கோரி” என்ற சிறந்த நூலை எழுதிய ரகுராம்ராஜன்,‘ எந்த ஒரு அமைப்பிலும் நல்ல நிர்வாகம் சரியான அரசு இல்லை என்றால் சிலர் அதை பயன்படுத்தி பெரிய பங்கை அநியாயமாக கைப்பற்றிவிட்டு கொண்டு பொது சந்தையே இல்லாமல் மாற்றிக்கொள்வார்கள் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
பறிக்கப்பட்ட அதிகாரம்!
1991 க்கு பிறகு நமது நாட்டில் மாற்றம் ஏற்படுகிறது. அதன் மூலம்தான் சிஏஜி,சிபிஐ, ஆர்பிஐ போன்ற சுதந்திரத்துடன் வலுவான நிறுவனங்களாக செயல்பட்டதால் வளர்ச்சி அதிகமானது. மிக சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருந்தது. ஆனால், இன்றைய சூழ்நிலையில் இந்த அமைப்புகளின் நிலைமை தலைக்கீழாக மாறிக்கொண்டிருப்பதை நாம் அனைவரும் அறிவோம். பலதும் நமது கையில் தற்போது கிடையாது. இதுகுறித்து சட்டமன்றத்திலும் சட்டமன்றத்திற்கு வெளியிலும் நிறைய விவாதம் நடைபெற்றுள்ளது. பல அதிகாரங்கள் மாநில அரசின் கையில் இல்லை என்பதையும் மிக தெளிவாக விளக்கினார்.
விலை குறைப்பால் யாருக்கு லாபம்!
பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது. இதுகுறித்த தரவு திரட்ட முயன்றோம். ஆனால், தகவல் எதுவும் நம்மிடம் இல்லை. எல்லாம் ஒன்றிய அரசின் ஐஓசி, பிபிஎல் போன்ற நிறுவனங்களிடம் இருக்கிறது. அதை தேடி எடுப்பதற்கு கடினமான சூழ்நிலை நிலவுகிறது. இது அனைத்தும் ஒன்றிய அரசிடமிருக்கிறது என்பது குறிப்பிட்டு சொல்ல வேண்டியிருக்கிறது. ஆனாலும், நமக்கு கிடைத்த தகவலின்படி, தமிழ்நாட்டில் பெட்ரோல் குறைப்புக்கு பிறகு, ஒரு நாளைக்கு சராசரியாக 11.2 லட்சம் அதிகமாக விற்பனையாகி உள்ளது. பெட்ரோல் விலையை 3 ரூபாய் குறைத்ததன் காரணமாக தினமும் 12 சதவீத அளவுக்கு பெட்ரோல் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் 11.29 லட்சம் லிட்டர் பெட்ரோல் கூடுதலாக விற்பனையாகி உள்ளது.
இதனால் ஒன்றிய அரசுக்கு தினமும் கூடுதலாக 3.55 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. நமது முதலமைச்சர் செய்த விலை குறைப்பு நடவடிக்கையால் இந்திய ஒன்றிய அரசுக்கு ஒரு ஆண்டுக்கு ரூ.1,200 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும்.
ஆனால், அத்தியாவசிய தேவையாக பெட்ரோல் மாறிவிட்டதால் என்ன விலைக்கு விற்றாலும் பெட்ரோல் நிரப்பியாக வேண்டும் என்று மக்கள் உள்ளதால் வரியை உயர்த்திக்கொண்டே செல்கிறது என்றும் இந்திய ஒன்றிய அரசு மீது குற்றம் சாட்டினார்.
முதல்படி
தற்போது பொருளாதாரம் மிக மந்த நிலையில் இருக்கிறது. அதை வெல்வது அவ்வளவு சுலபமல்ல என்றாலும் வரவும்-செலவும் எப்போதும் சமமாக இருக்க முடியாது. ஏற்றத்தாழ்வுகள் நீடிக்கும். ஆனாலும், எதற்காக? யாருக்காக வரியை உயர்த்துகிறோம் என்பதும் எந்த மக்களுக்கு, எதற்காக செலவு செய்கிறோம் என்பதும் முக்கியம்.அனைத்து துறைகளிலும் சீர்திருத்த நடவடிக்கைகள் வர உள்ளன. தரமற்ற கட்டிடங்களை ஆய்வு செய்வதுபோல் பல துறைகளில் ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. இது பழி வாங்கும் நடவடிக்கை இல்லை.
இந்த நிதி நிலை அறிக்கையில் அறிவித்திருக்கும் பல்வேறு திட்டங்களும் அறிவிப்புகளும் சீர்திருத்த நடவடிக்கையின் முதல் கட்டம்தான். இன்னும் பலது வர இருக்கிறது. நமது அரசின் கொள்கைகள் அனைத்தும் வெளிப்படைத் தன்மையுடன் இருக்கும். பொதுதளத்தில் வெளியிடப்பட்டு விவாதிப்போம். பகுத்தறிவு கொள்கையை கட்டாயம் கடைப்பிடிப்போம். வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கையின் அடிப்படையிலும், அண்ணா கூறிய தத்துவத்தையும் நடைமுறைக்கு கொண்டு வருவோம் என்றும் உலகின் பல்வேறு பொருளாதார அறிஞர்கள், வல்லுநர்களின் தத்துவம், மேற்கோள்கள், பழமொழிகள், நமது தமிழ் இலக்கியங்கள் என பலதையும் மேற்கொள் காட்டியும் ஒப்பீடு செய்தும் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்தியாகராஜன் பேசினார்.