சென்னை:
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மதச்சார்பின்மை மாண்புகளை தமிழக அரசு பின்பற்ற வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், செயலாளர் எஸ்.பாலாஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் கடும் வறட்சி காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு மொத்தம் உள்ள 32 மாவட்டங்களில் 24 மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்துள்ளது. இவ்வளவு நெருக்கடி நிலை வந்த பிறகும் நீர் சேமிப்பு குறித்து அரசு உரிய திட்டங்களோடு பணிகளை மேற்கொள்ளவில்லை.
இந்நிலையில் அறிவியல்பூர்வமான தீர்வை முன்னிறுத்தி பணிகளை செய்யாமல் தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை ஆணையர் அனைத்து இணை ஆணையர்களுக்கும் கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதியன்று சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளார். 2019-20 ஆம் ஆண்டில் நல்லமழை பெய்ய வேண்டும் என்பதற்காக அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள முக்கியகோவில்களில் மழை வேண்டி யாகம் செய்ய வேண்டும் என்றும் இதன் விவரத்தை தலைமைஅலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுமென்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அரசின் இந்தஅறிவிப்பு முற்றிலும் அறிவியலுக்கு புறம்பானது.
சென்னையில் வெள்ளம் மற்றும் காவிரியில் வெள்ளம் வந்தபோது தமிழக அரசு மழை நீரை சேமிக்கத் தவறிவிட்டது. மழை நீரை சேமிப்பது, நீர் நிலைகளை பராமரிப்பது, இயற்கை பாதுகாப்பு போன்ற பணிகளை முன்னெடுக்க வேண்டும். இந்து அறநிலையத்துறை ஆணையரின் சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என தமிழக அரசை வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு வலியுறுத்துகிறது.