districts

img

கொரோனா காலத்தில் 760 யூனிட் ரத்ததானம் அளித்த வாலிபர் சங்கத்திற்கு பாராட்டு சான்றிதழ் வழங்கல்

கொரானா பெருந்தொற்று காலத்தில் இந்திய ஜனாயக வாலிபர் சங்கம் சார்பில் செங்கல்பட்டு அரசு மருத்தவக் கல்லூரி மருத்துவமனைக்கு 760 யூனிட் ரத்தம் தானம் செய்ததைப் பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.

செங்கல்பட்டில்  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது. இம்மருத்துவமனையில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சார்ந்தவர்களும் தேசிய நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை ஆகியவற்றில் விபத்தில் படுகாயம் அடைபவர்களும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கொரானா பெருந்தொற்று காலத்தில் மருத்துவமனையில்  மகப்பேறு பிரிவு, விபத்து சிகிச்சைப் பிரிவுகளில் ரத்தத்தின் தேவையானது அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கியுடன் இணைந்து செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் ரத்ததான முகாமினை நடத்தினர்.

இதன் மூலம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மட்டும் 760 யூனிட் ரத்தம் மருத்துவமனைக்கு தானம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் இயங்கிவரும் 19 அமைப்புகளின் சார்பிலும் ரத்ததான முகாம் நடைபெற்றது.இந்நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் தேசிய தன்னார்வ ரத்ததான நாள் விழா வெள்ளியன்று (அக் 01) கொண்டாடப்பட்டது.  இவ்விழாவில் கொரானா பெருந்தொற்று காலத்தில் மக்கள் மீது அக்கறை கொண்டு 760 யூனிட் ரத்ததானம் செய்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினை பாராட்டி சான்றிதழைக்  கல்லூரி முதல்வர் ஜெ.முத்துக்குமாரன் வழங்கினார்.

 இதில், சங்கத்தின் மாநில துணை செயரலாளா் மபா.நந்தன், மாவட்டத் தலைவர் க.ஜீவானந்தம், மாவட்டச் செயலாளர் க.புருசோத்தமன், மாவட்ட பொருளாளர் இரா.சதிஷ்குமார், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மு.தமிழ்பாரதி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து ரத்ததான முகாம் நடத்திய 19 அமைப்புகளுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.  செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் கண்காணிப்பாளர் நமச்சிவாயம்,  நிலைய மருத்துவ அலுவலர் அனுபமா, துறைத் தலைவர் ரவி, நிலைய துணை மருத்துவ அலுவலர் (ரத்த வங்கி) கந்தன் கருணை ஆகியோர் உடனிருந்தனர்.