tamilnadu

img

 நெல்லை சாப்டர் பள்ளி மாணவர்கள் மரணத்திற்குக் காரணமான அதிகாரிகளையும் கைது செய்திடுக

 

நெல்லை சாப்டர் பள்ளி மாணவர்கள் மரணத்திற்குக் காரணமான அதிகாரிகளையும் கைது செய்ய வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.  

இதுதொடர்பாக, வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், மாநிலச் செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சாப்டர் மேல்நிலைப் பள்ளியில் கழிவறைச் சுவர் இடிந்து விழுந்ததில் அப்பள்ளியில் பயிலும் கே.அன்பழகன், டி.விஸ்வரஞ்சன் மற்றும் ஆர்.சுதிஷ் ஆகிய மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும்  படுகாயமடைந்த நான்கு மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த மாணவர்களுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.  இப்பிரச்சனையில் பள்ளியின் தலைமையாசிரியர், தாளாளர் மற்றும் கட்டிட ஒப்பந்ததாரர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலியான மாணவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடும், காயமடைந்த மாணவர்களுக்கு தலா 3 லட்சம் இழப்பீடும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பள்ளிகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க பள்ளி கல்வித்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.      

இந்த சம்பவம் தொடர்பாக பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அவர்கள், பள்ளியின் கழிவறை சுவர் அடித்தளம் அமைக்காமல் கட்டப்பட்டுள்ளது தான் விபத்திற்குக் காரணம் என்று தெரிவித்துள்ளார். இத்தகவல் நம்மை மிகப்பெரிய அதிர்ச்சிக்கு ஆளாக்குகிறது. காரணம் அந்த சுவர் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது.  தமிழகத்திலுள்ள பள்ளி மற்றும் கல்லூரி வகுப்பறைகள், ஆய்வுக் கூடங்கள், நூலகங்கள், கழிப்பறைகள், விளையாட்டு மைதானங்கள் என அனைத்து விதமான கட்டுமானங்களும் தரமானதாக, சுகாதாரமானதாக உள்ளதா என்பதை கல்வித்துறை, வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசோதித்து சான்றிதழ் வழங்க வேண்டும் என்று சட்டம் உள்ளது.

ஆனால், இந்த அதிகாரிகள் பள்ளி மற்றும் கல்லூரி கட்டிடங்களை நேரில் சென்று ஆய்வு செய்யாமல் முறைகேடாக சான்றிதழ் வழங்கி வந்துள்ளனர்.  இதுபோன்ற நடவடிக்கைக் காரணமாகத்தான் விபத்து நடந்த பள்ளியில் அடித்தளம் இல்லாத சுவர்களால் கட்டப்பட்ட கழிப்பறை பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. பள்ளி நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகள் நேர்மையுடன் செயல்பட்டிருந்தால் இந்த விபத்தைத் தவிர்த்திருக்க முடியும்.

எனவே, மூன்று மாணவர்களின் உயிரை பலிவாங்கிய இந்த கட்டிடத்திற்கு முறைகேடாக சான்றிதழ் வழங்கிய அதிகாரிகளை உடனடியாக கைது செய்வதுடன் கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்துகிறது.

மேலும், விபத்தில் பலியான மாணவர்களுக்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீடு என்பது போதுமானதல்ல. எனவே, கூடுதல் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவர்களுக்கு உயர்தரமான சிகிச்சை அளிப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.  மேலும், தமிழக அரசு அறிவித்துள்ளபடி பள்ளிகளில் மட்டுமின்றி அனைத்து கல்வி நிலையங்களில் உள்ள கட்டுமானங்கள் குறித்து உரிய ஆய்வை மேற்கொள்வதுடன்  தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பு விசயத்தில் அலட்சியமாக இருக்கும் பள்ளி நிர்வாகங்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.