உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த டி. குகேஷுக்கு ரூ. 5 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில்; உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் தமிழ்நாட்டில் கடந்த 2022 ஆம் ஆண்டு மிகச் சிறப்பாக திட்டமிட்டு, நடத்தப்பட்டன. அதில் பங்குபெற்று வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து வீரர்களையும் முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்துப் பாராட்டி, பரிசுகளை வழங்கினார்.
தற்போது சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த டி. குகேஷ் நேற்று நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை வென்று சாதனைப் படைத்துள்ளார்.
மிக இளம் வயதிலேயே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்று உலக செஸ் சாம்பியனாக இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்ததாக குகேஷை, தனது எக்ஸ் தளத்தில் பாராட்டி வாழ்த்தி முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டிருந்தார். தொலைபேசி வாயிலாகவும் அவரைத் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில், தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ள குகேஷுக்கு ரூ. 5 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.