tamilnadu

img

சமவேலைக்கு சம ஊதியம்கோரி பெண்கள் மறியல்...

சர்வதேச உழைக்கும் பெண்கள் தினத்தை முன்னிட்டும், சமவேலைக்கு சமஊதியம் வழங்க வலியுறுத்தியும் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு (சிஐடியு) சார்பில் நாடு முழுவதும் வெள்ளியன்று (மார்ச் 6) சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. வடசென்னை மாவட்டம் புரசைவாக்கம் தொலைபேசி அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் இரா.மணிமேகலை தலைமை தாங்கினார். இணை அமைப்பாளர்கள் நிர்மலா, சாலட், புனிதா உதயகுமார், குட்டிராணி, சிஐடியு மாவட்டத்தலைவர் எஸ்.கே.மகேந்திரன், செயலாளர் சி.திருவேட்டை, பொருளாளர் வி.குப்புசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் உழவர் சந்தை அருகில் சாலை மறியல் நடைபெற்றது. உழைக்கும் பெண்கள் துணை அமைப்பாளர் எஸ். பூங்கோதை தலைமையில் நடைபெற்ற மறியலில்  சிஐடியு மாவட்டத் தலைவர் கே.விஜயன், மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன், மாவட்ட நிர்வாகிகள் பி.நடேசன், எம்.சுமதி, எம்.முனியம்மாள், அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் மாவட்டச்  செயலாளர் ஆர்.லட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர். அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் மாவட்ட அமைப்பா ளர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி உழைக்கும் பெண்கள் மாநில கன்வீனர் தனலட்சுமி,  சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.கண்ணன்,  மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார், பொரு ளாளர் வசந்தா  ஐசிடிஎஸ் மாவட்டச் செயலாளர் கஜலட்சுமி,  மாவட்டத் தலைவர் ராஜேஸ்வரி,  மின்சார நிர்வாகி நாக லட்சுமி, உள்ளாட்சி ஊழியர் சங்கத்தின் நிர்வாகி கற்பகம் உள்ளிட்ட பலர் பேசினர். போராட்டத்தில் ஈடுபட்ட வர்களை செங்கல்பட்டு காவலர்கள் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

மின் வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு  ஊதிய உயர்வு பணப்பயன்கள், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மின் பகிர்மான வட்டம் சென்னை வடக்கு கிளையின் சார்பில் கும்மிடிப்பூண்டி துணை மின் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதற்கு வடக்கு கிளையின் தலைவர் கதிரேசன் தலைமை தாங்கினார். இதில் சங்கத்தின் செயலாளர் சத்யா,  வடக்கு மண்டல ச்செயலாளர் எம்.ரவிக்குமார் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.