சென்னை:
ஏழைக்குழந்தைகளை பள்ளியிலிருந்து வெளியேற்றி விரட்டும் வகையில் மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள புதிய தேசியக் கல்விக் கொள்கையை திரும்பப்பெறவேண்டும் என்று வலியுறுத்தி வியாழனன்று தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மையங்களில் கருப்புப் பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறாமல் மத்திய அமைச்சரவையில் மட்டுமே ஒப்புதல் பெற்று செயல்படுத்தப்படவுள்ள தேசியக்கல்விக் கொள்கை 2020 என்பது உண்மையில் கல்வி விலகல் கொள்கையே. இந்த கல்விக்கொள்கையானது கிராமப்புற மற்றும் ஏழை,எளிய உழைப்பாளி குடும்பங்களின் குழந்தைகளை பள்ளியில் இருந்து வெளியேற்றுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. மருத்துவப்படிப்புக்கு இருப்பது போன்ற நுழைவுத் தேர்வை கலை,அறிவியல் பட்ட படிப்பிற்கும் கொண்டுவருகிறது. மூன்று, ஐந்து,எட்டாம் வகுப்புகளிலேயே தேசியஅளவில் பொதுத்தேர்வு என்பது மாண வர்களை வடிகட்டி வெளியேற்றுவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
எனவே இத்தகைய தேசியக் கல்விக்கொள்கையை எதிர்த்து செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்த தினத்தில் தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிரான ஒடுக்கப்பட்டோர் கூட்டியக்கம் சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது.தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முயற்சியினால் உருவாக்கப்பட்ட இந்தகூட்டியக்கத்தில் தந்தை பெரியார் திராவிடர்கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், தியாகிஇமானுவேல் பேரவை, அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், தமிழ்நாடுமலைவாழ் மக்கள் சங்கம், ஆதித்தமிழர் பேரவை , ஆதித்தமிழர் கட்சி, தமிழ் புலிகள் கட்சி, திராவிட தமிழர் கட்சி, பீம்சேனா, அம்பேத்கர் நூற்றாண்டு இயக்கம், வன வேங்கைகள் கட்சி, ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை, நீலப்புலிகள் இயக்கம், தூய்மைப் பணியாளர் சங்கம், இரட்சணிய சேனை சமுதாய நல அமைப்பு, நீலப்புலிகள் இயக்கம், தம்மம் சிந்தனையாளர் பேரவை, தமிழ் சிறுத்தைகள் கட்சி, பழங்குடி பாரதம் மற்றும்பல அமைப்புகள் அங்கமாக உள்ளன.
மாநில அரசின் உரிமையைப் பறிக்கிற, குலத்தொழிலை ஊக்குவிக்கின்ற, சமஸ்கிருதத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் தருகின்ற, இட ஒதுக்கீட்டு உரிமைகளை இல்லாமல் செய்கின்ற தேசியக் கல்விக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும்.
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் கொண்டு வர வேண்டும். தமிழக அரசின் இருமொழிக் கொள்கை தொடர வேண்டும். 10,பிளஸ். 2 முறை தொடர வேண்டும். மூன்றாண்டுபட்டப்படிப்பு தொடர வேண்டும். கல்லூரிச் சேர்க்கைக்கு அகில இந்தியத் தேர்வு கூடாது. சமூகநீதியின் அடிப்படையிலான இடஒதுக்கீட்டு உரிமைகள் தொடர வேண்டும் என்றமுழக்கங்களுடன் குடியிருப்பு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பெண்கள், பள்ளி கல்லூரி மாணவர்களும் இவ்வியக்கத்தில் பங்கேற்றனர். போராட்டத்தை வெற்றிபெறச் செய்தமைக்கு கூட்டியக்கத்தின் தலைவர்கள் நன்றி தெரிவித்துள்ளதுடன், தமிழக அரசு தேசியக் கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்தக்கூடாது என்று வலியுறுத்தி போராட்டங்கள் தொடரும் என்று அறி வித்துள்ளனர்.