சென்னை:
கொரோனா பரிசோதனையை எந்த நபர்கள் செய்துகொள்ள வேண்டும் என்பது குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று சோதனைக்காக சீனாவிலிருந்து ஒரு லட்சம் துரித சோதனைக் கருவிகளை தமிழக அரசு வாங்கியுள்ளது. இந்தக் கருவிகள் கிடைத்தவுடன் விரைவாக ஒரே நேரத்தில் ஒரு லட்சம் பேருக்கு பரிசோதனை செய்ய முடியும். பரிசோதனையின் முடிவுகளை 30 நிமிடத்தில் பெற முடியும். கொரோனா அதிகம் பாதித்த இடங்களுக்கு இந்த உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன.
துரித பரிசோதனை கருவிகள், சமூகப் பரவல் இருக்கிறதா என்பதை அறிய உதவும். இந்த கருவிகள் தடுத்து வைக்கப்பட்ட பகுதிகளில் பயன்படுத்தி சமூகப் பரவலை அறியவுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைகழக ஜி.ஐ.எஸ் மேப்பிங் மூலமாக எந்தெந்த பகுதி மக்களுக்கு துரித பரிசோதனைகள் தேவைப்படும் என்பது கண்டறியப்படும்.
இந்திய மருத்துவ கவுன்சில் கீழ்க்கண்டவற்றை அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா உறுதிசெய்யப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்த அறிகுறிகள் அற்ற நபரும், அவருடனான தொடர்புக்கு பின்பு 5 நாள் முதல் 14-வது நாளுக்குள் ஒருமுறையேனும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.கடைசி 14 நாட்களில் வெளிநாட்டு பயணத்தில் இருந்த அறிகுறிகள் உடைய நபர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.தீவிர சுவாசக் கோளாறு உள்ள நோயாளிகள். அறிகுறிகளைக் கொண்ட சுகாதாரப் பணியாளர்கள்.கொரோனா பாசிட்டிவ்வாக உறுதி செய்யப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்து, அறிகுறிகளுடன் இருப்பவர்கள்.
அதிக அளவிலான கூட்டமாக வாழ்பவர்கள், இடம் பெயர்ந்த தொழிலாளர்கள், மையங்களில் அறிகுறிகள் உடைய அனைவரும், அதாவது 7 நாட்கள் தொடர்ச்சியான அறிகுறிகள் எதுவாயினும் அவர்களும் ஆர்.டி பிசிஆர் முறையில் சோதிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.சமூகப் பரவல் என்னும் மூன்றாவது கட்டத்திற்கு இந்தியா செல்லவில்லை என்று மருத்துவக்கவுன்சிலின் மூத்த விஞ்ஞானியான ராமன் கங்காகேத்கர் தெரிவித்துள்ளார்.