சென்னை:
தமிழ்நாட்டின் எதிர்ப்பையும் மீறி மேகதாது அணையைக் கட்டுவோம் என்று கூறிவரும் கர்நாடக அரசுக்கும் முதலமைச்சர் எடியூரப்பாவுக்கும் கடும்கண்டனம் தெரிவித்ததுடன் தமிழ்நாடுஅரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழுஒத்துழைப்பு கொடுப்போம் என்று அனைத்து கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள் ளது.கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு (மேகதாது)அருகே பெங்களூர் நகருக்கு குடிநீர் விநியோகம் செய்ய ஏதுவாக 9 ஆயிரம் கோடிரூபாய் செலவில் 67.14 டிஎம்சி கொள்ளளவு தண்ணீரை தேக்கி வைப்பதற்கான அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு மேற்கொண்டுள்ளது. இந்த அணையில் இருந்து 400 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திட்டமும் செயல்படுத்தப் படுகிறது. அணையைக் கட்டியே தீருவோம் என்று மீண்டும், மீண்டும் கூறிவரும் கர்நாடக அரசின் இந்த போக்கு மிகவும் ஆபத்தானதாகும்.
அணை கட்டுவதை எதிர்க்கக் கூடாதுஎன்று தமிழக முதலமைச்சருக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா எழுதிய கடிதத்திற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் கடிதமும் எழுதினார். முன்னதாக, இந்த பிரச்சனை குறித்துபிரதமர், அமைச்சரிடமும் தமிழ்நாட்டின்நிலைபாட்டை தெளிவாக எடுத்து விளக்கியிருந்தார். அத்துடன், தமிழ்நாட்டின் மூத்த அமைச்சர் இந்த விவகாரத் தில் துரைமுருகனை தில்லிக்கு அனுப்பிவைத்தார். அப்போது கர்நாடக அரசின்அடாவடிப் போக்கால் எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்பதையும் எடுத்துரைக்கப்பட்டது.
அப்போது, தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கமாட்டோம் என ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர், தமிழ்நாட்டிற்கு உறுதியளித்த பிறகும் கூட அணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடக அரசு கூறுவதும், ஒன்றிய அரசிடம் உரிய அனுமதி பெற்று அணை கண்டிப்பாக கட்டப்படும் என்று கர்நாடக அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியிருப்பதும் இரு மாநில உறவை சீர்குலைக்கும் செயலாகும்.இந்த அணை விவகாரத்தில் கடந்தகாலங்களில் ஒன்றிய பாஜக அமைச் சர்கள் கொடுத்த வாக்குறுதியை ஒருபோதும் நிறைவேற்றியது கிடையாது. இப்போதும் கூட, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்வதாகவோ, அந்தஅனுமதியின் அடிப்படையில் தயாரிக்கப்படும் எந்த ஆவணமும் செல்லாதுஎன்றோ கூறவில்லை. இத்தகைய சூழலில், அரசியல் காரணங்களுக்காக மேகதாது விவகாரத்தில் கர்நாடகத்தின் பக்கம் ஒன்றிய அரசு சாயாது என்பதற்கு உத்தரவாதமில்லை.
ஆகவே, இந்த அணை விவகாரத்தில் கர்நாடகத்தை எதிர்கொள்வதற் கான உத்திகளை வகுக்கவும், தமிழ் நாடும் ஒரே அணியில் ஒற்றுமையாக இருக்கிறது என்பதை ஒன்றிய அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் தெளிவுபடுத்தவும் அனைத்துக் கட்சிக் கூட்டத் தைக் கூட்ட வேண்டும் என்று தமிழக அரசுக்கும் முதலமைச்சருக்கும் அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன.ஒட்டுமொத்த தமிழகமும் இந்த அணைக்கு எதிராக ஓரணியாய் நிற்பதன் நோக்கம், மேகதாது அணை கட்டப்பட்டால் மேட்டூர் அணைக்கு ஒரு சொட்டுநீர் கூட வருவதற்கு வழி இல்லாமல் போகும்; தமிழகத்தின் உயிர் ஆதாரமான காவிரி பாலைவனமாக மாறிவிடும். ஆகவே ஒன்றிய அரசு ஒருபோதும்அனுமதி அளிக்கக் கூடாது என்பதே ஆகும்.இந்த நிலையில் மேகதாது விவகாரம் குறித்து விவாதிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் திங்களன்று (ஜூலை12) அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். மேலும், தமிழக சட்டப்பேரவையில் உள்ள 13 கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், “உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரியின் கீழ்ப்படுகை மாநிலங்களின், முன் அனுமதியைப் பெறாமல் மேகதாதுவில் எந்தவொரு கட்டுமானப் பணியையும் மேற்கொள் ளக் கூடாது. அதை மீறி, தற்பொழுது மேகதாதுவில் அணை கட்டுவதற்கான முயற்சிகளை கர்நாடக அரசு முழு முனைப்புடன் செய்து வருவது மிகவும் கண்டனத்திற்குரியது. இத்திட்டத்தினால் தமிழ்நாடு விவசாயிகளுக்குத் தேவையான நீர் கிடைப்பது பாதிப்படையும். உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிரானஇத்தகைய முயற்சி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாட்சிமைக்கு விடப்படும் சவாலாகும். எனவே, கர்நாடகஅரசின் இத்திட்டத்திற்கு, இதில் தொடர்புடைய ஒன்றிய அரசின் அமைச்சகங்கள் எவ்விதமான அனுமதிகளையும் வழங்கக் கூடாது என ஒன்றிய அரசைக்கேட்டுக்கொள்வது;மேகதாதுவில் அணை அமைப்பதற்கான முயற்சிகளைத் தடுப்பதில் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மாநிலத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தங்களுடைய முழு ஆதரவையும், முழுஒத்துழைப்பையும் வழங்கும்;தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை முழுமையாக பிரதிபலிக்கும் வகையில், இக்கூட்டத்தின் தீர்மானங்களை ஒன்றிய அரசிடம் அனைத்துக் கட்சியினரும் நேரில் சென்று முதற்கட்டமாக வழங்குவது; அதன்பிறகு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் வழக்கு உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மற்றும் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற் கொள்வது” எனவும் மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.