சென்னை:
இந்திய நாட்டின் மிகவும் பழமையான (219 ஆண்டுகள்) 41 பாதுகாப்புத்துறை தளவாட உற்பத்திதொழிற்சாலைகளை அரசுத்துறை யிலிருந்து வெளியேற்றி, கார்ப்பரேச னாக மாற்றி, பின்னர் தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு தன்னிச்சையாக எடுத்துள்ள முடிவைக் கண்டித்து நாடெங்கிலும் உள்ள பாதுகாப்புத்துறை தொழிலாளர்கள் போராடி வருகிறார்கள்.
இதில் 12-10-2020 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்திடஅனைத்து தொழிற்சங்க சம்மேளனங்களும் முடிவெடுத்து அரசுக்கு நோட்டீஸ் கொடுத்த நிலையில், 9-10-2020 ஆம் நாள் மத்திய தொழிலாளர் நல ஆணையர் சமரசப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து அதன் அடிப்படையில் வேலை நிறுத்தம் ஒத்தி வைக்கப்பட்டு மத்திய அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஒருபக்கம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் மத்திய அரசு, மறுபக்கம் தனது தன்னிச்சையான முடிவை அமல்படுத்துவதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றது. இன்றைய தினம் இதுசம்மந்தமாக நெறிமுறைகளை வகுக்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் அமைக்கப்பட்ட அமைச்சரவைக் குழுவின் கூட்டம் முடிவு செய்யவுள்ள நிலையில், நாடெங்கிலும் உள்ள 41 தொழிற்சாலைகளில் பணிபுரியும் 79 ஆயிரம் பாதுகாப்புத்துறை ஊழியர்களும் மத்திய அரசின் தன்னிச்சையான கார்ப்பரேசனாக மாற்றும் முடிவை ஏற்க மாட்டோம், மத்திய அரசு ஊழியர் மற்றும் பாதுகாப்புத்துறை ஊழியர் எனும் தங்களது தகுதியை இழக்க மாட்டோம் என உறுதிமொழி எடுத்து கீழ்க்கண்ட உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திட்டு மத்திய பாதுகாப்பு அமைச்சருக்கு அனுப்பியுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 6 பாதுகாப்புத்துறை தளவாட உற்பத்தி தொழிற்சாலைகளிலும் ஏஐடிஇஎப், ஐஎன்டியுசி, பிஎம்எஸ், தொமுச உள்பட அனைத்து சங்கங்கள் மற்றும் அசோசியேஷன்களைச் சேர்ந்த தலைவர்கள் முன்னிலையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்றது. இதனை அகில இந்திய பாதுகாப்புத்துறை ஊழியர்கள் சம்மேளன பொதுச் செயலாளர் ஸ்ரீகுமார் தெரிவித்துள்ளார்.