tamilnadu

img

அதிக விலைக்கு தண்ணீர் விற்பனை அரசு நடவடிக்கை எடுக்குமா?

சென்னையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மாநகராட்சி குடிநீர் வாரியம் வீடுகளுக்கு வழங்கும் குழாயில் ஒரு நாளைக்கு ஒரு முறை என்ற நிலை மாறி 3 நாட்களுக்கு, 4 நாட்களுக்கு ஒருமுறைதான் வழங்கப்படுகிறது.சென்னை குடிநீர் வாரியம், தனியார் லாரிகள் என தினமும் 3,500க்கும் அதிகமாக இயக்கப்படுகின்றன. தண்ணீர் விநியோகம் செய்து வரும் லாரிகளுக்கு குடிநீர் வாரியம் சார்பில் 20 ஆயிரம் லிட்டருக்கு 2,200, ரூபாயும், 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரிகளுக்கு ரூ. 1,200 என கட்டணமும் வசூலிக்கிறது.மாநகராட்சி குடிநீர் லாரிகளுக்கு தகவல் தெரிவித்தால் உடனடி யாக  வருவதில்லை என்றும், ஓரிரு நாட்கள் தாமதமாகவே வருகிறது. அப்போது கூட போதிய தண்ணீர் கொடுப்பதில்லை. ஆனால், கூடுதலாக பணம் கொடுப்பவர்களுக்கு, முதலில்  தண்ணீர் விநியோகம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. குடிநீர் தட்டுப் பாட்டை பயன்படுத்தி தண்ணீர் லாரிகள் கொள்ளை லாபத்தில் தண்ணீரை விற்பனை செய்து வருகின்றன. ஆனால், இதை அதிகாரிகளும், அரசும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என்பது வேதனையாகும். மக்களுக்கு அடிப்படை ஆதாரமான நீரை வழங்க வேண்டிய அரசே குடிநீரை விற்பனை செய்து வருகிறது.சென்னைக்கு குடிநீர் வழங்கும் தண்ணீர் லாரிகள் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் நீர் ஆதாரத்தை நம்பியே உள்ளன. தென் சென்னைக்கு நீர் வழங்கும் லாரிகள் மேடவாக்கம், திருப்போரூர் இடையிலான கிராமங்களில் உள்ள நிலத்தடி நீரை எடுத்து  வருகின்றன. ஆனால் இவ்வாறு எடுத்து வரும் லாரிகளுக்கு எந்த கட்டுப்பாடும் இருப்பதாகத் தெரியவில்லை. அப்பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் குறைவான தொகைக்கு கொடுக்கிறர்கள். நகருக்குள் கொள்ளை லாபத்திற்கு தண்ணீர் விற்பனை செய்கிறார்கள்.அதேபோல் வட சென்னைக்கு பூந்தமல்லி செந்நீர் குப்பம், அம்பத்தூர் அருகே உள்ள அயப்பாக்கம், ஆவடி சேக்காடு உள்ளிட்ட இடங்களில் நிலத்தடி நீரை போர் போட்டு எடுத்து வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் சென்னை அருகே உள்ள புறநகர் பகுதிகளிலும், அருகில் உள்ள மாவட்டங்களின் நிலத்தடி நீரும் அதல பாதாளத்திற்கு சென்றுவிட வாய்ப்புள்ளது.கடல் நீரை சுத்திகரித்து நன்னீராக மாற்றும் மையங்கள் இருந்த போதிலும் தொடர்ந்து சென்னை வாசிகளுக்கு போதிய நீர் கிடைக் காமல் அவதிப்படும் நிலை உருவாகியுள்ளது.“நீர் இன்றி அமையாது உலகு” என்ற திருவள்ளுவரின் கூற்றை மனதில் நிறுத்தி, சென்னை மாநகராட்சியும், தமிழக அரசும் நிரந்தரமாக குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அம்பத்தூர் எஸ்.ராமு