சென்னை:
ஒன்றிய பாஜக அரசு, தமிழகமக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு கூட்டம் ஜூலை 13,14 ஆகிய தேதிகளில் சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ. லாசர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே. ரங்கராஜன்,அ. சவுந்தரராசன், உ. வாசுகி, பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழக அரசும், தமிழ்நாட்டு மக்களும் நீட் தேர்விலிருந்து தங்களுக்கு முற்றாக விலக்கு அளிக்கவேண்டுமென்ற கோரிக்கையை நீண்ட காலமாக விடுத்து வருகின்றனர். ஆனால் தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க ஒன்றிய அரசுதொடர்ந்து மறுப்பதென்பது தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு உரிய மதிப்பளிக்காத செயலாகும். மேலும் நீட் தேர்வால் அரசுப்பள்ளி மாணவர்கள், பட்டியலின மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட மாணவர்கள், ஏழை, எளிய, நடுத்தர குடும்பங்களைச் சார்ந்தவர்கள் பெரிதும் பாதிக்கப்படும் நிலையே கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளது.இந்நிலையில் தமிழகத்தில் நீட்தேர்வு உருவாக்கியுள்ள தாக்கம்குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு தனது அறிக்கையினை அரசிடம் அளித்துள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வினால் மருத்துவக் கல்வியில் உருவாகியுள்ள சமூக, பொருளாதார தாக்கம், பெற்றோர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் முன்வைத்த முக்கிய கருத்துகள், ஆலோசனைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு விரிவான பரிந்துரையை இக்குழு அரசுக்கு அளித்திருப்பதாகவும், ஆனாலும் மாநிலம்முழுவதுமிருந்து வந்த 86,342கருத்துக்களில் மிகப்பெரும்பாலான கருத்துக்கள் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்குதேவை என்பதை மையப்படுத்தியே இருந்ததாகவும் அக்குழுவின்தலைவர் ஏ.கே.ராஜன் தெரிவித்துள்ள கருத்து மிக முக்கியமானது.
இத்தகைய நிலைமைகளின் பின்னணியில்தான், இந்த ஆண்டும் நீட் தேர்வு நடைபெறும் எனவும், வருகிற செப்டம்பர் 12 அன்று நடைபெற உள்ள தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் அதற்காக விண்ணப்பிக்கலாம் எனவும் ஒன்றிய அரசின் சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. எனவே ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் உணர்வுகளையும், நீதிமன்ற வழிகாட்டுதல்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க ஒன்றிய அரசு முன்வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வலியுறுத்துகிறது.
ஒரு வேளை இந்த ஆண்டு விலக்கு அளிக்கப்படாது எனும்நிலை ஏற்பட்டால், விண்ணப்பிக்கும் அனைத்துத்தரப்பு மாணவர்களுக்கும் தேர்வுக்கான உரிய பயிற்சி இலவசமாக அளிப்பதற்கு அனைத்து விதமான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் ஒன்றிய அரசையும், மாநில அரசையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
தடுப்பூசி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டின் கோரிக்கையை நிறைவேற்றுக!
கொரோனா நோய்த்தொற்றிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கு தடுப்பூசி மிகவும் அவசியமான ஒன்றாகும். தற்போது நோய்த் தொற்றின் இரண்டாம் அலை குறைந்திருக்கும் நிலையில் மூன்றாவது அலை வரும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.இந்நிலையில் பிரதமர் மோடி நாட்டில் உள்ள அனைவருக்கும் ஒன்றிய அரசின் சார்பில் இலவசமாகவும், தட்டுப்பாடின்றியும் தடுப்பூசிகள் வழங்கப்படுமெனவும், மாநிலங்களுக்கு தடுப்பூசிகள் அளிப்பதில் பாரபட்சமான அணுகுமுறைகள் எதுவும்இருக்காது எனவும் அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.ஆனால் தமிழ்நாட்டிற்கு தேவையான அளவில் தடுப்பூசிகளை வழங்குவதில் மோடி அரசு உரிய அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை என்பதோடு, இதர மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் தடுப்பூசிகள் எண்ணிக்கையோடு தமிழ்நாட்டின் நிலைமையை ஒப்பிட்டால் தொடர்ச்சியாக தமிழக மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்களோ எனும் ஐயமுமே எழுகிறது.குறிப்பாக, பாஜக ஆளும் மாநிலங்களில் 6.27 கோடி மக்கள் தொகை கொண்ட குஜராத் மாநிலத்திற்கு 1000-க்கு 553 பேருக்கும், 6.41 கோடி மக்கள் தொகை கொண்ட கர்நாடகாவுக்கு 1000-க்கு 493 பேருக்கும், 6.89 கோடி மக்கள் தொகை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்திற்கு 1000-க்கு446 பேருக்கும் என்ற விகிதத்தில்தடுப்பூசிகள் அளிக்கப்படுவதாகவும், ஆனால் 7.21 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டிற்கு 1000-க்கு வெறும் 302பேர்களுக்கு மட்டுமே தடுப்பூசிகளை ஒன்றிய அரசு வழங்கி வருகிறது எனவும் தரவுகள் தெரிவிக்கின்றன. மாநில மக்கள் தொகைக்கு ஏற்ப தேவையான அளவில் தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்யாத ஒன்றிய அரசின் இத்தகைய அணுகுமுறையினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ஏற்கனவே செங்கல்பட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனத்தை தடுப்பூசி தயாரிக்க தமிழகஅரசிடம் ஒப்படைக்க வேண்டுமென்ற கோரிக்கைக்கும் செவிமடுக்காமல் அந்நிறுவனத்தின் செயல்பாட்டை முடக்கியுள்ள ஒன்றிய அரசு, தற்போது தடுப்பூசிவழங்குவதிலும் ஒரு தலைபட்சமான அணுகுமுறையையே கடைப்பிடிக்கிறது.எனவே, பாஜக ஒன்றிய அரசு, தமிழ்நாட்டுக்கு எதிரான இத்தகைய அணுகுமுறைகளை கைவிடுவதோடு, தமிழக மக்களின் தேவைகளையும், கோரிக்கைகளையும் நிறைவேற்றவும், தேவையான தடுப்பூசிகளை தட்டுபாடின்றி உடனடியாக அளிக்கவும் முன்வர வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.