tamilnadu

img

யுஜிசி புதிய விதிமுறைகளின் வரைவுக்கு எதிராக தனித் தீர்மானம்!

துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பாக யுஜிசி வெளியிட்டுள்ள புதிய வரைவு விதிமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தி சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக சமீபத்தில் பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்ட நெறிமுறைகளைத் திரும்பப்பெற வேண்டும்; வரைவு அதேபோல் இளங்கலை, முதுகலைப் பட்டப்படிப்புகளில் கற்கை முறைகளுக்கான குறைந்தபட்ச வரைவு நெறிமுறைகள், 2024 மற்றும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஆசிரியர்கள், கல்விப் பணியாளர்கள் நியமனம் மற்றும் பதவி உயர்வு குறித்து வெளியிட்ட வரைவு நெறிமுறைகள், 2025 ஆகியன தேசிய கல்விக் கொள்கை, 2020-இன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக மானியக் குழுவின் இத்தகைய நடவடிக்கைகள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடான கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது மட்டுமல்ல; தமிழ்நாட்டின் உயர் கல்வி முறைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகவும் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் சமூகநீதிக் கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வலுவான உயர் கல்விக் கட்டமைப்பை இந்த வரைவு நெறிமுறைகள் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாலும், தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை கடுமையாகப் பாதிக்கும் என்பதாலும் பல்கலைக்கழக மானியக் குழுவின் இந்த இரண்டு வரைவு நெறிமுறைகளையும், துணைவேந்தர் நியமனம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வரைவு நெறிமுறைகளையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று ஒன்றிய அரசின் கல்வித் துறையை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் தாக்கல் செய்தார். இந்த தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.