ஓய்வு கால பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் மாநிலம் தழுவிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
24 மாதமாக பணி ஓய்வு பெற்ற 3500 தொழிலாளர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள ஓய்வுக்கால பலன்களை வழங்க வேண்டும், பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு 2வருட ஊதிய ஒப்பந்த நிலுவையை கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் 21 மையங்களில் போக்குவரத்து ஊழியர்கள், ஓய்வூதியர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
சென்னையில் மாநகர போக்குவரத்து கழக தலைமையகமான பல்லவன் இல்லம் முன்பு அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் தலைவர் ஆர்.துரை தலைமையில் நடைபெறும் போராட்டத்தை சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் கே.ஆறுமுகநயினார், பொருளாளர் சசிக்குமார், சங்கத்தின் பொதுச் செயலாளர் வி.தயானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.