tamilnadu

img

இன்று பெண் விவசாயிகள் தினம்.... ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் பெண்கள்...

சென்னை:
விவசாயிகள் விரோத 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்றும், தில்லி போராட்ட களத்திலிருந்து பெண்கள்உடனடியாக வீடுகளுக்குத் திரும்ப வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மறுத்தும், திங்களன்று சென்னையில் ஆளுநர் மாளிகையை பெண்கள் முற்றுகையிடுகின்றனர். 

விவசாயிகளுக்கு விரோதமான 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுமாறு, இந்தியாவின்  பல்வேறு மாநிலங்களில் இருந்து திரண்டு வந்து விவசாயிகள் தங்கள் குடும்பங்கள், குழந்தைகளோடு கடுங்குளிரில் 50 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். இப்போராட்டத்தில் 70க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ள நிலையிலும்,  வேளாண் சட்டங்களை திரும்ப பெற மத்திய அரசு மறுத்து வருகிறது. இந்நிலையில் உச்சநீதிமன்றம்  இச்சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதித்ததோடு, நால்வர் கொண்ட ஒரு குழுவையும் அமைத்து, மத்திய அரசோடும் விவசாயிகளோடும் பேச்சு வார்த்தை நடத்தி, 2 மாதத்திற்குள் அறிக்கை  தரும்படி உத்தரவிட்டுள்ளது. நால்வர் குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் கடந்த காலத்தில் வேளாண் சட்டங்களுக்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்து பேசியவர்கள் என்பதால், போராட்டத்தை திசைமாற்றும் உத்தியே இது என கூறி விவசாயிகள் ஒருங்கிணைப்புகுழு  நாடு முழுவதும் போராட்டத்தைத் தீவிரப்படுத்த அறைகூவல் விடுத்திருக்கிறது.

இந்தியாவில் விவசாய பணிகளில் ஈடுபட்டுள்ளோரில் 42 சதத்துக்கும் அதிகமானோர் பெண்களாக  இருக்கின்றனர். இருப்பினும் பெண்களை விவசாயிகளாக அங்கீகரிக்காத நிலையில்,  பெண்கள் ஏன் போராட்டக்களத்தில் இருக்கின்றனர், அவர்கள் வீட்டுக்கு செல்ல வேண்டும் என தலைமை நீதிபதி குறிப்பிட்டுள்ளது, உழைப்பிலும் போராட்டங்களிலும் பெண்கள் அளித்து வரும் பங்கேற்பை மதிக்காத ஆணாதிக்க போக்கே ஆகும் என்று, தமிழக அனைத்துப் பெண்கள் கூட்டமைப்பு விமர்சித்துள்ளது.

தில்லியில் போராட்டங்களை வழிநடத்தி வரும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா ஜனவரி 18ம் நாளை பெண் விவசாயிகள் தினமாக அனுசரிக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்திருப்பதை ஏற்று 18.01.21 அன்று  நாடு முழுவதும் உள்ள பெண்கள் அமைப்புகள் பல்வேறு வடிவங்களில் இயக்கங்கள் போராட்டங்கள் நடத்த உள்ளன.அதன்படி, வேளாண் விரோத சட்டங்களை அரசு திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தியும், விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் பெண்களைச்  சட்டப்பூர்வமாக ‘விவசாயிகள்’ என்று   அங்கீகரிக்க வேண்டும் என்றும்,  சமவேலைக்கு சமகூலி என்பதை வேளாண் துறையில் உறுதி செய்ய வேண்டும் என்பது உட்பட  பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி திங்களன்று காலை 11 மணிக்கு தமிழகத்தில் அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெறுகிறது.