பழங்குடி இருளர் குடும்பத்திற்கு அடையாள அட்டைகள் வழங்க
கோரிக்கை வேலூர், நவ.25- பழங்குடி இருளர் குடும்பத்திற்கு அடையாள அட்டைகள் வழங்க கோரி மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் வருவாய் அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம், முள்ளிபாளையம் அடுத்த திடீர் நகர் வீராசாமி தெருவைச் சேர்ந்த முருகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த வாகன விபத்தில் உயிரிழந்தார். அவரது மனைவி பச்சையம்மாள் மற்றும் பிள்ளைகள் தமிழ்ச்செல்வி, அப்பு, தேவி, ஏழுமலை, எத்திராஜ் உள்ளிட்ட குடும்பத்தினர் வசிக்க நிரந்த வீடு இல்லாததால் பிளக்ஸ் பேனர்களைக் கொண்டு கூடாரம் அமைத்து வசித்து வருகின்றனர். இருளர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இக்குடும்பத்தினரிடம் ஆதார் அட்டை, ரேசன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை எதுவும் இல்லாததால் அரசு சலுகைகளை பெற இயலவில்லை. இதையடுத்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட செயலாளர் சி.எஸ்.மகாலிங்கம் மக்கள் குறைதீர் முகாமில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தார். அம்மனுவில், அரசு சார்பில் குறிப்பிட்ட முகவரி அடிப்படையில் உடனடியாக இக்குடும்பத்தினருக்கு பழங்குடி நலவாரியம், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை வழங்குவதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
