tamilnadu

img

கொரோனாவை தடுக்க சித்த மருத்துவ சிகிச்சை மையம் திறப்புக்கு சிபிஎம் வரவேற்பு......

சென்னை;
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சித்த மருத்துவ சிகிச்சை மையம் திறக்கப் பட்டுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. ஹோமியோபதி, ஆயுர்வேதம், யுனானி, அக்குபஞ்சர் சிகிச்சை முறையையும் பயன்படுத்திட வேண்டும் என்று தமிழக அரசுக்கு  வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

கொரோனா பரவலை கட்டுப்படுத்த சென்னை, வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியில் சித்த மருத்துவ சிகிச்சை மையம் திறக்கப்பட்டு குறைந்த அளவு தொற்று உள்ளவர்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படும் என்றும்,  வியாசர்பாடியை தொடர்ந்து இதே போல் மேலும் 12 இடங்களில் சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள்திறக்கப்பட உள்ளது என  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாண்புமிகு. மா. சுப்பிரமணியன் அவர்கள் அறிவித்து உள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.
முந்தைய அலையில் கொரோனா சிகிச்சைக்கு கொரோனா நோயாளிகளுக்கு தமிழகத்தில் பாரம்பரிய வைத்திய முறையான சித்த மருத்துவம் மற்றும் கபசுர குடிநீர்நல்ல பலனை தந்துள்ளது. அதுபோல ஹோமியோபதி மருந்தான ஆர்சானிக் ஆல்பம் மருந்தும் உதவியாக அமைந்தது. இதனால் கொரோனா பரவல் தமிழகத்தில் கட்டுபடுத்தப்பட்டதுடன் உயிரிழப்புகளும் தடுக்கப்பட்டன. ஆயுர்வேதம், யுனானி, அக்குபஞ்சர் சிகிச்சை முறை மூலமும் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று இத்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, தமிழக அரசு கொரோனா சிகிச்சைக்கு தமிழகத்தில் பாரம்பரிய சித்த மருத்துவ சிகிச்சை முறையுடன், ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி, அக்குபஞ்சர் துறையில் உள்ள வல்லுநர்களுடனும் கலந்தாலோசித்து இந்த சிகிச்சை முறைகளையும் கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசையும், சுகாதாரத்துறை அமைச்சரையும் கேட்டுக் கொள்கிறது.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.